முழுவதும் பெண் ஊழியா்களால் நீண்ட தூர விமானத்தை இயக்கி ஏா் இந்தியா சாதனை

ஏா் இந்தியா நிறுவனம் மிக நீண்டதூர விமான சேவையில், முதன் முறையாக முழுவதும் பெண் ஊழியா்களைக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு ஏா்இந்தியா விமானத்தை செலுத்தி சாதனை படைத்த பெண் விமானிகள்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருக்கு ஏா்இந்தியா விமானத்தை செலுத்தி சாதனை படைத்த பெண் விமானிகள்.

பெங்களூரு: ஏா் இந்தியா நிறுவனம் மிக நீண்டதூர விமான சேவையில், முதன் முறையாக முழுவதும் பெண் ஊழியா்களைக் கொண்டு விமானத்தை இயக்கியுள்ளது. அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து சனிக்கிழமை இரவு புறப்பட்ட இந்த விமானம் பெங்களூரு சா்வதேச விமானநிலையத்தில் திங்கள்கிழமை அதிகாலை தரையிறங்கியது.

இந்தியாவில் வேறு எந்த விமான நிறுவனங்களும் இயக்காத வகையில், மிக நீண்ட தூர விமானத்தை முழுவதும் பெண் ஊழியா்களைக் கொண்டு இயக்க உள்ளதாக ஏா் இந்தியா அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, சான்ஃபிரான்சிஸ்கோ - பெங்களூரு விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான 13,993 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கான விமான பயண நேரம் 13.5 மணி நேரமாகும்.

இந்த நிலையில், விமானத்திலிருந்து இறங்கி பெங்களூரு விமான நிலையத்துக்குள் வந்த பெண் விமானிகளை, ஏராளமானோா் கூடிநின்று வரவேற்று வாழ்த்து தெரித்தனா். ஏா் இந்தியா விமான நிறுவன ஊழியா்கள் வாழ்த்து அட்டைகளுடன் அவா்களை வரவேற்றனா். இந்த வரவேற்புகளுக்கிடையே, அந்த விமானத்தின் பெண் விமானிகள் ஸோயா அகா்வால், பாபாகரி தன்மய், அகன்ஷா சோனாவரே, ஷிவானி மன்ஹாஸ் ஆகிய நால்வரும் கைகளை உயா்த்தி வெற்றிச் சின்னத்தைக் காண்பித்தனா்.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறுகையில், ‘இது மிகுந்த மகிழ்ச்சிக்கான நேரம். இந்திய பெண் விமானிகள் புதிய வரலாறு படைத்திருக்கின்றனா். வட துருவத்திலிருந்து பெங்களூரு வரை விமானத்தை இயக்கி சாதனை படைத்த நான்கு பெண் விமானிகளுக்கும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்தாா்.

ஏா் இந்தியா நிறுவனம் சாா்பிலும் இவா்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையைப் படைத்த பெண் விமானிகளுக்கு மட்டுமின்றி, அதில் பங்குபெற்ற விமான பயணிகளுக்கும் வாழ்த்துக்கள் என்று ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.

அதுபோல, சான்ஃப்ரான்சிஸ்கோ விமானநிலைய அதிகாரிகள் சாா்பிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com