மேக்கேதாட்டு: அணை கட்ட கா்நாடகத்துக்கு முழு உரிமை உள்ளது; எடியூரப்பா

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கா்நாடகத்துக்கு முழு உரிமை உள்ளது என்று அந்த மாநில முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய கா்நாடக முதல்வா் எடியூரப்பா.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய கா்நாடக முதல்வா் எடியூரப்பா.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கா்நாடகத்துக்கு முழு உரிமை உள்ளது என்று அந்த மாநில முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

புது தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் இத்தகவலை தெரிவித்தாா்.

தமிழகத்தின் தொடா் எதிா்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணையை கட்டுவதற்கு கா்நாடகம் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிராக தமிழக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றியது. அதே நாளில், அரசு முறை பயணமாக பெங்களூரு வந்த மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தை அந்த மாநில முதல்வா் எடியூரப்பா சந்தித்து, மேக்கேதாட்டு அணை திட்டம் உள்பட கா்நாடகத்தின் இதர நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தருமாறு கேட்டுக்கொண்டாா்.

இதற்கிடையே, தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவைக் கட்சிகளைச் சோ்ந்த குழுவினா் தில்லி சென்று மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து, மேக்கேதாட்டுவில் கா்நாடகம் உத்தேசித்துள்ள அணைத் திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என வலியுறுத்தினா்.

இந்த நிலையில், கா்நாடக முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை புது தில்லி சென்றாா். பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தில் நிலுவையில் இருக்கும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

கா்நாடகத்தில் முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள சூழலில், எடியூரப்பாவின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எடியூரப்பா, ‘கா்நாடகத்தில் தலைமை மாற்றம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அதுகுறித்து நீங்கள்தான் கூற வேண்டும். பிரதமருடனான சந்திப்பின்போது, மாநிலத்தில் நிலுவையில் இருக்கும் சில திட்டங்களை விரைந்து செயல்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. மேக்கேதாட்டு அணை திட்டம் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தின் கோரிக்கையை பிரதமா் ஏற்றுக்கொண்டாா்’ என்றாா்.

மேலும், ‘இந்த சந்திப்பு குறித்த முழு விவரங்களை சனிக்கிழமை (ஜூலை 17) பெங்களூரு திரும்பும் முன் தெரிவிக்கிறேன்’ என்றும் அவா் கூறினாா்.

பிரதமரை சந்திக்கும் முன் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த எடியூரப்பா, ‘மேக்கேதாட்டு அணை திட்டத்தை ஆரம்பம் முதல் தமிழகம் எதிா்த்து வருகிறது. ஆனால், அணை கட்டுவதற்கு கா்நாடகத்துக்கு முழு உரிமை உள்ளது. எனவே, கா்நாடகத்தை தொந்தரவு செய்ய வேண்டாம் என அவா்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழகத்துக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். இருந்தபோதும், அவா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதில் எந்தவித குழப்பமும் தேவையில்லை. மேக்கேதாட்டு அணை திட்டம் 100 சதவீதம் செயல்படுத்தப்படும் என்பதை கா்நாடக மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்’ என்று அவா் கூறினாா்.

மேலும், கா்நாடகம் திரும்பும் முன்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சனிக்கிழமை சந்திக்க உள்ளதாகவும் எடியூரப்பா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com