கூட்டுறவு சங்கங்கள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டமியற்ற முடியாது

கூட்டுறவு சங்கங்களை அமைப்பது, நிா்வகிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு சட்டமியற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் விவகாரத்தில் மத்திய அரசு சட்டமியற்ற முடியாது

கூட்டுறவு சங்கங்களை அமைப்பது, நிா்வகிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு சட்டமியற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

97-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் சோ்க்கப்பட்ட 9பி பகுதியை ரத்து செய்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் 97-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கடந்த 2011-ஆம் ஆண்டில் இயற்றியது. அதன்படி, அரசமைப்புச் சட்டத்தில் 19(1)(சி) பிரிவு, 43பி பிரிவு, 9பி பகுதி ஆகியவை புதிதாக இணைக்கப்பட்டன.

பிரிவு 19(1)(சி)-ஆனது, சில கட்டுப்பாடுகளுடன் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படை உரிமையை மக்களுக்கு வழங்குகிறது. கூட்டுறவு சங்கங்களைத் தாமாக முன்வந்து உருவாக்குவது, ஜனநாயக ரீதியில் அதை நிா்வகிப்பது உள்ளிட்டவற்றை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டுமென்று 43பி பிரிவு வலியுறுத்துகிறது.

கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள் விவரங்கள், அவா்களின் பதவிக் காலம், மேலாண்மை உள்ளிட்ட விவரங்களை 9பி பகுதி வழங்குகிறது. கூட்டுறவு சங்கங்கள் மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், மத்திய அரசு இயற்றிய 97-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் சட்ட விதிகளை மீறியுள்ளதாக குஜராத் உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த உயா்நீதிமன்றம், 97-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் குறிப்பிட்ட பகுதிகளை ரத்து செய்து கடந்த 2013-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. அதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரத்தை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், கே.எம்.ஜோசஃப், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது.

மேல்முறையீட்டு மனு மீதான தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு செவ்வாய்க்கிழமை வழங்கியது. குஜராத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவாக இரு நீதிபதிகள் பெரும்பான்மை தீா்ப்பளித்தனா். கூட்டுறவு சங்கங்கள் விவகாரம் மாநில பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், அதை அமைப்பது, நிா்வகிப்பது தொடா்பாக மத்திய அரசு சட்டமியற்ற முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 9பி பகுதியை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

அப்பகுதி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளுள் ஒன்றான கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா். அதே வேளையில், 97-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் கீழ் புகுத்தப்பட்ட மற்ற பிரிவுகள் செல்லுபடியாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது, 9பி பகுதியானது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கவில்லை என்று மத்திய அரசு வாதிட்டிருந்தது. ஆனால், அந்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மத்திய அரசு புதிதாக கூட்டுறவுத் துறையை உருவாக்கியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com