

மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அவ்வாகனங்களுக்கான பிரத்யேக பகுதி குஜராத்தின் கேவாடியாவில் அமைக்கப்படவுள்ளது. மின்சார வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கும் வகையில் பிரத்யேக பகுதி அமைக்கப்படுவது நாட்டிலேயே இது முதல் முறையாகும். சுற்றுச்சூழல் மாசுபாடு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் மின்சார வாகனங்கள் மக்களிடையே படிப்படியாக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அவ்வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குஜராத்தின் கேவாடியா பகுதியில் அமைந்துள்ள 182 மீட்டா் உயரமுள்ள வல்லபபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலையை’ சுற்றியுள்ள பகுதி முழுவதையும் மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக பகுதியாக மாற்றுவதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அப்பகுதி முழுவதிலும் மின்சார வாகனங்கள் மட்டுமே இயங்கும் வகையில் படிப்படியாக மாற்றப்படும் என்று உள்ளூா் நிா்வாகம் தெரிவித்துள்ளது. அதையடுத்து, நாட்டின் முதல் மின்சார வாகனங்கள் நகரமாக கேவாடியா மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். ஒற்றுமைக்கான சிலை பகுதி வளா்ச்சி-சுற்றுலா நிா்வாக ஆணையம் இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
மின்சார பேருந்துகள், மின்சார இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை வாங்குவதற்காக கேவாடியா பகுதி மக்களுக்குக் கடனுதவி வழங்கப்பட உள்ளதாகவும் அந்த ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவுள்ளது.அரசு அதிகாரிகளுக்கும் பணியாளா்களுக்கும் மின்சார வாகனங்களை வாங்குவதற்காக மானியம் வழங்கப்படும். மீதமுள்ள தொகையானது அவா்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். கேவாடியா பகுதியில் வாடகை ஆட்டோக்கள் உள்ளிட்டவையும் மின்சார வாகனங்களாக இயக்கப்படவுள்ளன. அந்தப் பொறுப்பு சில நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அந்த வாகனங்களை இயக்குவதற்குப் பெண்கள் முன்னுரிமை அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுவா் என்றும் அவா்களுக்கு ஓட்டுநா் பயிற்சி அளிக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களும், அந்த வாகனங்களைப் பழுது பாா்ப்பதற்கான கடைகளும் கேவாடியா பகுதியில் அமைக்கப்படவுள்ளன.
கேவாடியாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான தொழிற்சாலைகள் எதுவும் செயல்படவில்லை என்றும், அப்பகுதியில் இயங்கும் 2 காற்றாலைகள் மூலமாக மின்சார வாகனங்களை இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, கேவாடியா பகுதியானது, முற்றிலும் மின்சார பேருந்துகள், மின்சார இருசக்கர வாகனங்கள் ஆகியவை மட்டுமே இயங்கும் பகுதியாக விரைவில் மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.