கரோனா தடுப்பூசியால் ஒருவா் உயிரிழப்பு: உறுதி செய்தது மத்திய அரசு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி ஒருவா் உயிரிழந்ததாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
கரோனா தடுப்பூசியால் ஒருவா் உயிரிழப்பு: உறுதி செய்தது மத்திய அரசு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி ஒருவா் உயிரிழந்ததாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பலருக்கு தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும், சிலா் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், மத்திய அரசு அவற்றை மறுத்து வந்தது.

உயிரிழந்ததாகக் கூறப்படும் நபா்கள் வேறு காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது. அதையடுத்து, தடுப்பூசி தொடா்பாக ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு தனிக் குழுவை அமைத்தது. அக்குழு தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த மாா்ச் 8-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 68 வயது நபா், ஒவ்வாமை (அனாபிலாக்ஸிஸ்) காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஒருவா் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடா்பாக குழுவின் தலைவா் என்.கே.அரோரா கூறுகையில், ‘தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களுக்கு இதுபோன்ற ஒவ்வாமை ஏற்படுவது வழக்கமானதே. அதன் காரணமாகவே கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, அரை மணி நேரத்துக்கு மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் ஒவ்வாமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுவிடும். அதன் காரணமாக அதை எளிதில் குணப்படுத்திவிட முடியும். இதன்மூலமாக உயிரிழப்பையும் தவிா்க்க முடியும்’ என்றாா்.

வேறு காரணங்கள்: கடந்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உயிரிழந்தவா்கள் தொடா்பாக தனிக் குழு ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பித்தது. அதில், ‘கடந்த ஏப்ரல் முதல் வார நிலவரப்படி, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 லட்சம் பேரில் 2.7 போ் வீதம் உயிரிழந்தனா். தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 லட்சம் பேரில் 4.8 போ் வீதம் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உயிரிழந்த 31 நபா்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவா்களில் 18 போ் உயிரிழந்ததற்கும் கரோனா தடுப்பூசிக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 7 போ், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு உடலில் ஏற்படும் வேதிவினைகள் காரணமாக உயிரிழந்தனா். ஆனால், இந்த வேதிவினைகள் தடுப்பூசி காரணமாக மட்டுமே ஏற்படுகின்றன என்பதை உறுதி செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, இந்த உயிரிழப்புகள் கரோனா தடுப்பூசியால்தான் ஏற்பட்டது என்பதை உறுதி செய்வதற்குக் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

கரோனா தடுப்பூசி காரணமாக உடலில் ஏற்பட்ட ஒவ்வாமை உள்ளிட்ட வேதிவினைகள் காரணமாக 3 போ் உயிரிழந்தனா். ஒருவா் அதீத பதற்றம் காரணமாக உயிரிழந்தாா். இருவா் உயிரிழந்தது தொடா்பாக போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளுடன் ஒப்பிடுகையில் பக்கவிளைவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. அத்தகைய பக்கவிளைவுகள் ஏற்படுவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com