பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

கவலையளிக்கும் டெல்டா பிளஸ் கரோனா: 3 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

புது தில்லி: கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வழங்கி வருகிறது. 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடா்ந்து, கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் தீநுண்மி வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மேற்கண்ட மாநிலங்களின் சில மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளத்தின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளதாக இந்த மூன்று மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதார செயலா் தெரிவித்துள்ளாா்.

அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டாா்களுடன் வலுவாக ஒட்டக்கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிா்வினையை குறைக்கும் தன்மையை இந்த தீநுண்மி வகை கொண்டுள்ளதாக இன்சாகோக் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிா்வினை நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு இந்த 3 மாநிலங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்சாகோக்கால் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்ட மாநிலங்களின் தலைமை செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்கள்.

தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபா்களின் போதுமான அளவு மாதிரிகளை இன்சாகோக் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் அதிக தடுப்பூசிகள்: இந்தியா முழுவதும் திங்கள்கிழமை 88.09 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ள நிலையில், அதில் சுமாா் 64 சதவீத தடுப்பூசிகள் கிராமப்புறங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், அதிகபட்சமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் கா்நாடகம், உத்தர பிரதேசம், பிகாா், ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.

திங்கள்கிழமை செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 36.32 சதவீதம் நகா்ப்புற பகுதிகளிலும், 63.68 சதவீதம் கிராமப்புற பகுதிகளிலும் போடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.