விவசாயிகளை 'ஜிகாதி'களுடன் ஒப்பிட்ட கங்கனா; வேளாண் சட்ட ரத்துக்கு எதிராக கருத்து

பல பாலிவுட் பிரபலங்களும் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத் இதற்கு நேர் எதிர் கருத்தை கூறியிருக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டையே புரட்டி போட்ட விவசாயிகளின் போராட்டத்திற்கு காரணமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

இதை பல்வேறு தலைவர்கள், வரவேற்றிருந்தாலும், தேர்தல் காரணமாகவே சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பிறகு பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது ஒரு அற்புதமான செய்தி. விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற்றதற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி. அமைதியான போராட்டங்கள் மூலம் நியாயமான கோரிக்கைகளை எழுப்பிய விவசாயிகளுக்கு நன்றி. ஸ்ரீ குருநானக் ஜெயந்தியன்று நீங்கள் உங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் திரும்புவீர்கள் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தருமான ஊர்மிளா மடோன்கர், "எந்தவொரு விஷயத்திலும் வெற்றி பெறப் பேரார்வமும், கொதிக்கும் ரத்தமும் தேவை. எண்ணங்கள் உறுதியானதாக இருந்தால் அந்த வானமும் தரைக்கு வரும். விவசாய சகோதர சகோதரிகளுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். தியாகிகளான விவசாயிகளுக்கு வீர வணக்கம்" எனப் பதிவிட்டுள்ளார். 

அதேபோல பாலிவுட் பிரபலங்களான டாப்சி,  குல் பனாக், தியா மிர்சா உள்ளிட்ட பலரும் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

இப்படிப் பல பாலிவுட் பிரபலங்களும் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நிலையில், 
நடிகை கங்கனா ரணாவத் இதற்கு நேர் எதிர் கருத்தை கூறியிருக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர், "வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது, முற்றிலும் நியாயமற்றது. நாடாளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பதிலாகச் சாலைகளில் உள்ளவர்கள் சட்டத்தை இயற்ற தொடங்கினால் இதுவும் ஜிகாதி தேசம் தான். இப்படி நடக்க வேண்டும் என விரும்பிய அனைவருக்கும் வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com