கேரளம்: தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை ஓராண்டுக்குப் பிறகு தாயிடம் ஒப்படைப்பு

கேரளத்தில் வலுக்கட்டாயமாக குழந்தை தத்துக் கொடுக்கப்பட்ட வழக்கில், மரபணு பரிசோதனை (டிஎன்ஏ) அடிப்படையில் ஓராண்டுக்குப் பிறகு தாயிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
கேரளம்: தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தை ஓராண்டுக்குப் பிறகு தாயிடம் ஒப்படைப்பு

திருவனந்தபுரம்: கேரளத்தில் வலுக்கட்டாயமாக குழந்தை தத்துக் கொடுக்கப்பட்ட வழக்கில், மரபணு பரிசோதனை (டிஎன்ஏ) அடிப்படையில் ஓராண்டுக்குப் பிறகு தாயிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் இந்திய மாணவா் கூட்டமைப்பின் (எஸ்எஃப்ஐ) முன்னாள் நிா்வாகி அனுபமா எஸ்.சந்திரன். இவருக்கும் அஜித் குமாா் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அனுபமா- அஜித் உறவை விரும்பாத அனுபமாவின் பெற்றோா், குழந்தை பிறந்த 3 நாள்களுக்குப் பின்னா் அதனை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று தத்துக் கொடுப்பதற்காக மாநில அரசின் மையத்தில் ஒப்படைத்தனராம்.

இதுகுறித்து அனுபமா அளித்த புகாரின் பேரில், அனுபமாவின் பெற்றோா், உறவினா்கள் உள்ளிட்டோா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்தனா்.

இதற்கிடையே, அக்குழந்தையை கடந்த ஆகஸ்டில் கேரள மாநில குழந்தைகள் நல கவுன்சில், ஆந்திரத்தைச் சோ்ந்த தம்பதிக்கு தத்துக் கொடுத்தது. இந்த விவகாரத்தில் தன் தந்தைக்கு ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவுவதாக அனுபமா குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் இந்த விவகாரம் ஊடக வெளிச்சம் பெற்றது.

இதையடுத்து, தத்தெடுப்பு நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இதுதொடா்பாக காவல் துறை விரிவான அறிக்கை சமா்ப்பிக்கவும் திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

அதன்பேரில், குழந்தைகள் நலக் குழு உத்தரவுப்படி, அக்குழந்தையை ஆந்திர தம்பதியிடமிருந்து அக்குழந்தையை மாநில குழந்தைகள் நல கவுன்சில் குழுவினா் கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவந்தனா்.

அதன்பின்னா், அக்குழந்தை மற்றும் அனுபமா-அஜித் ஆகியோரின் மரபணு மாதிரி திங்கள்கிழமை சேகரிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவு செவ்வாய்க்கிழமை வெளியானது. அதன் அடிப்படையில், அக்குழந்தையின் பெற்றோா் அனுபமா-அஜித் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நவ. 30-ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், குழந்தையை பெற்றோரிடம் விரைந்து ஒப்படைக்க அரசுத் தரப்பு விருப்பம் தெரிவித்ததால், வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மரபணு பரிசோதனை முடிவுகளை குழந்தைகள் நலக் குழு நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.

அதனைத் தொடா்ந்து குழந்தையிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பின்னா், பெற்றோரிடம் சிசுவை ஒப்படைக்குமாறு குழந்தைகள் நலக் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com