சிவசேனை ஆட்சியை கவிழ்க்க முயற்சி? போதைபொருள் விவகாரத்தில் சவால் விடும் உத்தவ் தாக்கரே

இந்துக்களையும் இந்துத்துவாவையும் ஏணியாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்களே இப்போது இந்துத்துவா கொள்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என உத்தவ் தாக்கரே விமரிசித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)

போதை பொருள் விவகாரத்தை முன்வைத்து மகாராஷ்டிரா அரசு மீது பாஜக மூத்த தலைவர்கள் கடும் விமரிசனங்களை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கு பதிலடி தந்துள்ள அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவில் மட்டும்தான் போதைப்பொருள் பிடிப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த மாதம் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் இருந்து பல கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டன. போதை தடுப்பு பிரிவு சில கிராம் கஞ்சாவை மீட்கும்போது, ​​எங்கள் காவல்துறையினர் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கைப்பற்றினர். அவர்களைப் பொறுத்தவரைப் பிரபலங்களைப் பிடிக்க வேண்டும். அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான். 

பாஜக உடனான கூட்டணியை முறிந்து கொண்டுவிட்டோம் என்பதற்காக சிவசேனையையும் மகாராஷ்டிர அரசையும் அவர்கள் தொடர்ந்து குறிவைக்கின்றனர். அரசுக்குப் பிரச்னை ஏற்படுத்த அமலாக்கத் துறையை ஏவிவிடுகின்றனர். இந்துத்துவா சித்தாந்தத்துக்கு, வெளியே இருப்பவர்களால் அச்சுறுத்தல் வரவில்லை. 

இந்துக்களையும் இந்துத்துவாவையும் ஏணியாகப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தவர்களே இப்போது இந்துத்துவா கொள்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். நான் குறிப்பிடும் அந்த நபர்களும் ஆங்கிலேயரை போலவே பிரித்தாளும் சூழ்ச்சியை அடிப்படையாக வைத்துள்ளனர். 

இவர்களிடம் இருந்து இந்துத்துவாவைக் காக்க வேண்டும். இதற்காக அனைத்து மராத்திய மக்களும், இந்துக்களும் ஒன்றுபட வேண்டும்.


அடுத்த மாதம் வந்தால் சிவசேனா ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் முடிந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். நான் சவால் விடுகிறேன். முடிந்தால், எனது ஆட்சியைக் கவிழ்த்துப் பாருங்கள்" என்றார்.

மும்பையை அடுத்த கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசுக் கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தின்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தியதாக ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் இம்மாதம் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட அா்பாஸ் மொ்சன்ட், மூன்மூன் தமேச்சா, நூபுா் சட்டோச்சா, மோகக் ஜெய்ஸ்வால் ஆகியோரும் ஜாமீன் கேட்டு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். ஆா்யன் கான் உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க அவா்களைக் கைது செய்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com