தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி உங்களிடம் இல்லை: சிவசேனை

அரசியல் பழிவாங்கும் செயல் காரணமாகவே இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் போஸ்டரில் நேருவின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என சிவசேனை எம்பி சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்திய சுதந்திரம் அடைந்த 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஹெச்ஆா்) வெளியிட்ட முதல் டிஜிட்டல் போஸ்டரில் ஜவஹா்லால் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பது மத்திய அரசின் குறுகிய மனப்பான்மையை வெளிகாட்டுகிறது என சிவசேனை எம்பி சஞ்சய் ரௌத் விமரிசித்துள்ளார்.

சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் சஞ்சய் ரௌத் இதுகுறித்து எழுதிய கட்டுரையில், "நேரு, மௌலானா அப்துல் கலாம் அசாத் ஆகியோரின் புகைப்படங்களை கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் போஸ்டரில் தவிர்த்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் செயல். 

சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வரலாற்றை எழுதுபவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களை தவிர்க்கிறார்கள். இந்த அரசியல் பழிவாங்கும் செயல் நல்லதுக்கல்ல. அவர்களின் குறுகிய மனப்பான்மையை வெளிகாட்டுகிறது. இது, சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தும் செயல். சுதந்திரத்திற்கு பிறகான நேருவின் கொள்கைகள் மீது ஒருவருக்கு மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால், நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.

நேருவை இந்தளவுக்கு அதிகமாக வெறுப்பதற்கு காரணம் என்ன? சொல்லப்போனால், அவர் கட்டி எழுப்பிய நாட்டின் சொத்துகளை விற்றுதான் இவர்கள் பொருளாதாரத்தை நடத்திவருகின்றனர்" என்றார்.

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் விலையில்லா புத்தக பைகளில் ஒட்டப்பட்டுள்ள முன்னாள் முதலவர்கள் ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இதை சுட்டிகாட்டிய சஞ்சய் ரௌத், "ஸ்டாலினுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி கூட உங்களிடம் இல்லை. நேருவை இந்தளவுக்கு அதிகமாக வெறுப்பதற்கு காரணம் என்ன?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com