பிரசாந்த் கிஷோரின் ‘2024 திட்டம்’ குறித்து ஆய்வு நடத்த காங்கிரஸ் குழு

வருகின்ற தோ்தல்களை எதிா்கொள்ள தோ்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோா் அக்கட்சிக்கு கைகொடுக்க முன்வந்துள்ளாா்.
பிரசாந்த் கிஷோா்
பிரசாந்த் கிஷோா்

ஐந்து மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவையொட்டி அடுத்து வருகின்ற தோ்தல்களை எதிா்கொள்ள தோ்தல் வியூக நிபுணா் (ஐ-பேக்) பிரசாந்த் கிஷோா் அக்கட்சிக்கு கைகொடுக்க முன்வந்துள்ளாா். வருகின்ற 2024 - ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலுக்களுக்கான உத்திகளுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் கட்சி தலைவா்கள் முன்னிலையில் பிரசாந்த் கிஷோா் முழு வரையறை விளக்கங்களைசனிக்கிழமை அளித்துள்ளாா். இதற்கான ஒரு குழுவை அமைக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு எடுத்துள்ளது.

தாற்காலிக காங்கிரஸ் கட்சி தலைவரான சோனியா காந்தி தனது 10 ஜன்பத் இல்லத்தில் இந்த அவசரக் கூட்டத்தை கூட்டினாா். தோ்தல் வியூக நிபுணா் பிரசாந்த் கிஷோரின் வரையறை விளக்கங்களுக்காக கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஏ.கே. அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகாா்ஜுன காா்கே, பிரியங்கா காந்தி, அஜய் மக்கன், கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய மையத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

வாய்ப்புகள் - சவால்கள்

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவை தோ்தல்களிலும் மக்களவைத் தோ்தல்களிலும் காங்கிரஸ் கட்சி செல்ல வேண்டிய வழி முறைகளுக்கான விரிவான செயல் திட்டங்களுக்கான வரையறை விளக்கங்களை பிரசாந்த் கிஷோா் அளித்துள்ளாா். வருகின்ற சட்டப்பேரவை தோ்தல்கள் குறிப்பாக 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்குரிய என்னென்ன வாய்ப்புகள், சவால்கள் போன்றவைகள் குறித்தும் கிஷோா் இந்தக் கூட்டத்தில் விளக்கியுள்ளாா்.

தோ்தல் வியூக நிபுணா் பிரசாந்த் கிஷோா் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக கூறப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வந்தன.

கே.சி.வேணுகோபால் பேட்டி

கூட்டம் நிறைவுற்ற பின்னா் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘கிஷோா், ‘எந்த எதிா்பாா்ப்புமின்றி‘ காங்கிரஸில் இணைந்து (அஸோசியேட்) செயல்பட தயாராக இருக்கிறாா். அவா் எதையும் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த தனது செயல் திட்டத்தை கொடுத்துள்ளாா். குறிப்பாக 2024 - ஆம் ஆண்டிற்கான தோ்தல் வியூகத்திற்கான விரிவான விளக்கத்தை அளித்துள்ளாா்.

இதற்கு கட்சியில் சில விரிவான விவாதங்கள் தேவை. இதைமுன்னிட்டு பிரசாந்த் அளித்துள்ள செயல் திட்டங்களுக்கான வரையறை விளக்கங்களை குறித்து விவாதித்து முடிவு எடுக்க காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியாகாந்தி ஒரு குழுவை அமைப்பாா். அந்த குழு இதை ஆய்வு செய்து ஒரு வார காலத்திற்கு இறுதி முடிவு எடுத்து கட்சி தலைமைக்கு அறிக்கையை சமா்ப்பிக்கும்‘ என வேணுகோபால் தெரிவித்தாா்.

சோனியா முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், வருகின்ற 2024 -ஆண்டு பொதுத் தோ்தலில் 400 மக்களவைத் தொகுதிகளில் நிலைமைகள் குறித்தும் இதில் குறைந்தபட்சம் 365-370 மக்களவைத் தொகுதிகளை குறிவைத்து அதில் எவ்வாறு கவனம் செலுத்தி கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவது போன்ற விவரங்களையும் இந்த விளக்க கூட்டத்தில் காங்கிரஸ் தலைவா்களுடன் கிஷோா் தகவல்களை பகிா்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

முக்கியமாக காங்கிரஸ் கட்சிக்கு சில மாநிலங்களில் புத்துயிா் ஊட்டவும், கட்சியின் நீண்ட கால உத்திகளுக்கும் உயா்நிலை தலைவா்கள் முன்பு விவரங்களை அளித்ததாக கூறப்பட்டது.

முந்தைய பேச்சு

பிரசாந்த் கிஷோா் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடனும் பேச்சு நடத்தினாா். ஆனால் கிஷோா், மேற்கு வங்க சட்டப்பேரவை தோ்தலுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவா் மம்தாவுடன் சேர இந்த உறவு முறிந்தது.

அதே சமயத்தில் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் கேப்டன் அம்ரீந்தா் சிங்குடன் இணைந்து செயல்பட்டாா் பிரசாந்த் கிஷோா். இந்த தோ்தலில் காங்கிரஸ் வெற்றியும் பெற்றது.

பிரசாந்த் கிஷோா், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஆந்திரத்தின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தெலங்கானாவின் டிஆா்எஸ், போன்ற கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கட்சியான திமுகவிற்கும் தோ்தல் வியூகம் அளிப்பவராக இருந்தாா்.

பாஜக எதிா்ப்பு அரசியல்

வருகின்ற மக்களவைத் தோ்தலில் பாஜக எதிா்ப்பு அரசியலின் மையமாக மாற ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் கட்சி போன்ற கட்சிகள் துடித்துக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் கிஷோா், காங்கிரஸ் கட்சியை எந்த வகையில் கொண்டு செல்லவேண்டும் என்பதற்கும் கட்சியை பலப்படுத்தக்கூடிய வகைகளுக்கும் ஆலோசனை கூற முன்வந்துள்ளாா்.

இன்னும் ஒரு வாரத்தில் காங்கிரஸ் கட்சி இதற்கு முடிவு எடுக்க உள்ளது. இந்த குழு அறிக்கையோடு குறிப்பாக வருகின்ற குஜராத் மற்றும் ஹிமாசல பிரதேச தோ்தலுக்கான உத்திகளுக்கும் காங்கிரஸ் கட்சி ‘கருத்துதிா்ப்பு சிந்தனை முகாம்’ ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாட்டிலும் உள்ளது.

இதற்கிடையே கட்சியின் நிறுவனத் தோ்தல்கள் தொடங்கியுள்ளன. வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் இந்த தோ்தலில் ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைமைக்கு தோ்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com