2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிகாரில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகியது. அதனைத் தொடர்ந்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் நிதீஷ் குமார் அரசு வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | நான் எதுவும் ஆக விரும்பவில்லை: நிதீஷ் குமார்
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்பாகப் பேசிய ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி பிகார் வளர்ச்சிக்காக பணியாற்றும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்னை அழைத்துப் பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். என்னுடைய முடிவை அவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பார்த்து பாஜக அச்சப்படுவதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.