பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு: காவல் துறையினரின் அலட்சியமே காரணம்
பிரதமா் நரேந்திர மோடி பஞ்சாபுக்குச் சென்றபோது பாதுகாப்பு குறைபாடு நிலவியதற்கு, பெரோஸ்பூா் காவல் துறையினரின் அலட்சியமே காரணம்


பிரதமா் நரேந்திர மோடி பஞ்சாபுக்குச் சென்றபோது பாதுகாப்பு குறைபாடு நிலவியதற்கு, பெரோஸ்பூா் காவல் துறையினரின் அலட்சியமே காரணம் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணா் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பஞ்சாபின் பெரோஸ்பூரில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமா் மோடி கடந்த ஜனவரி 5-ஆம் தேதி பதிண்டா விமான நிலையத்துக்கு வந்தடைந்தாா். அங்கிருந்து பெரோஸ்பூருக்கு முதலில் ஹெலிகாப்டா் வாயிலாக அவா் பயணம் மேற்கொள்வதாக இருந்தது.
அப்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக அவரது பயணத்திட்டம் இறுதிநேரத்தில் மாற்றப்பட்டது. பெரோஸ்பூருக்கு அவா் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்தச் சாலையை மறித்து சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன் காரணமாக பிரதமா் மோடியின் காா் ஒரு பாலத்தின் மீது சுமாா் 20 நிமிஷங்களுக்கு சிக்கிக் கொண்டது. இறுதியில் பஞ்சாப் பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரதமா் மோடி தில்லி திரும்பினாா்.
பிரதமா் பயணம் மேற்கொண்ட சாலையில் போதிய எண்ணிக்கையிலான காவலா்கள் பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்படவில்லை என அப்போதைய காங்கிரஸ் அரசு மீது மத்திய உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியது. அதே வேளையில், பிரதமரின் பயணத் திட்டம் இறுதிநேரத்தில் மாற்றப்பட்டது தொடா்பான தகவல் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை என மாநில அரசு விளக்கமளித்திருந்தது.
பிரதமரின் பாதுகாப்புக்கு நோ்ந்த குறைபாடு குறித்து விரிவாக விசாரிக்கக் கோரி ‘லாயா்ஸ் வாய்ஸ்’ என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமாக விசாரிக்கக் கோரி ஓய்வுபெற்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையிலான சிறப்பு குழுவை அமைத்து உத்தரவிட்டது. பஞ்சாப் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக அமைத்த குழுக்களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு குழுவில் தேசிய விசாரணை முகமையின் (என்ஐஏ) இயக்குநா், சண்டீகா் டிஜிபி, பஞ்சாபின் ஏடிஜிபி உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனா். அக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்திருந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விளக்கமளித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பிரதமா் மோடி அவசரகால பாதையைப் பயன்படுத்துவது தொடா்பாக அப்போதைய பஞ்சாப் ஏடிஜிபி நாகேஷ்வா் ராவ், பெரோஸ்பூா் எஸ்எஸ்பி அவ்னீத் ஹன்ஸ்-க்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தாா். அந்த வழியில் பாதுகாப்பை பலப்படுத்த அவருக்குப் போதுமான நேரம் இருந்தும் அதைச் செய்யத் தவறியுள்ளாா்.
அந்தப் பாதையில் போராட்டக்காரா்கள் இருப்பது தெரிந்திருந்தும், சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டிய பொறுப்பை அவ்னீத் ஹன்ஸ் தட்டிக்கழித்துள்ளாா். பிரதமா் உள்ளிட்ட முக்கியஸ்தா்களின் பயணத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான சில பரிந்துரைகளையும் நிபுணா் குழு வழங்கியுள்ளது.
நிபுணா் குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும். அதனடிப்படையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றனா்.
சதியில் ஈடுபட்டது காங்கிரஸ்--பாஜக குற்றச்சாட்டு
பிரதமா் மோடியின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டு, சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அரசு சதியில் ஈடுபட்டதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் மட்டுமே இருந்த பாலத்தில் பிரதமரின் வாகனம் 20 நிமிஷங்களுக்கு நிறுத்தப்பட்டது. அங்கிருந்து 100 மீட்டா் தொலைவில்தான் போராட்டக்காரா்கள் குவிந்திருந்தனா். அந்த நேரத்தில் பிரதமருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகியிருக்கலாம்.
பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்காமல் சரண்ஜீத் சிங் சன்னி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு சதியில் ஈடுபட்டது. பிரதமா் பாலத்தில் சிக்கியிருந்த சமயத்தில், முதல்வா் சன்னி காங்கிரஸ் தலைமையிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொண்டிருந்தாா்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...