மூன்று ஆண்டுகள்.. அயோத்தியில் புதிய மசூதி எங்கே?

கம்பி வேலி, இந்திய-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை வைத்திருக்கும் பலகை மட்டும்தான், இங்கே ஒரு மிகப்பெரிய மசூதி அமையவிருக்கிறது என்பதற்கான சாட்சிகளாக விளங்குகின்றன.
மூன்று ஆண்டுகள்.. அயோத்தியில் புதிய மசூதி எங்கே?
மூன்று ஆண்டுகள்.. அயோத்தியில் புதிய மசூதி எங்கே?

அயோத்தி: கம்பி வேலி, இந்திய-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை வைத்திருக்கும் பலகை மட்டும்தான், இங்கே ஒரு மிகப்பெரிய மசூதி அமையவிருக்கிறது என்பதற்கான சாட்சிகளாக விளங்குகின்றன. இதைத் தவிர அயோத்தியாவின் தனிப்பூரில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படவில்லை.

ராமஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்போது அந்தப் பணிகள் முடிந்தன. அங்கிருக்கும் பலகையில் அந்த நிலத்தில்ட அமையவிருக்கும் மசூதியின் வரைபடம் மட்டும் கம்பீரமாக வீற்றிருக்கிறது.

ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன். ஆனால், மசூதி அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இதுவரை தென்படவில்லை.

காரணம், அறக்கட்டளை அளித்த பரிந்துரைக்கு அயோத்தி மாவட்ட வாரியம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அது விரைவில் கிடைத்துவிடும் என்று அறக்கட்டளை நம்பிக்கொண்டிருக்கிறது.

விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் காரணமாக அது தாமதமாகிவிட்டது என்கிறார்கள் அறக்கட்டளை நிர்வாகிகள்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சா்ச்சைக்குரிய நிலம் தொடா்பான வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி தீா்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதியளித்தது. அதேவேளையில் அயோத்தியின் மற்றொரு இடத்தில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கா் நிலம் நிலம் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து தனிப்பூா் கிராமத்தில் சன்னி வக்ஃபு வாரியத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தில் மசூதி, மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், இந்திய-இஸ்லாமிய கலாசார ஆய்வு மையம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய மாதிரி புகைப்படமும் அடுத்த ஓராண்டுக்குப் பின் வெளியிடப்பட்டது. 

இந்த திட்டப் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கரோனா பேரிடர் காரணமாக பணிகள் தொடங்கப்படவில்லை.

மசூதி கட்டுமானப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், அண்மையில் வரை விவசாயம் நடைபெற்று வந்தது.  ஆனால் அது மசூதிக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது. 

மசூதி கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்ட இந்திய இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை (ஐஐசிஎஃப்), ‘தனிப்பூா் மசூதி திட்டப் பணிகள் தொடர்பாக அயோத்தி மாவட்ட வாரியத்திடம்  அனுப்பிய மசூதி கட்டுமான திட்டத்துக்கு கடந்த நவம்பதிலேயே அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தது.

உடனடியாக, மண் பரிசோதனை பணிகளை தொடங்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால், மசூதி, நூலகம் உள்பட அனைத்துக் கட்டுமானப் பணிகளுக்கும் இந்த மாதத்திலாவது அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புவதாக இந்திய-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை செயலா் அத்தா் ஹுசைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மசூதி கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கினால், 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முதலில் குறுகிய சாலை இருந்ததால், தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, பிறகு அதிக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது என்கிறார் ஹுசைன்.

தனிப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் 15,000 சதுர அடியில் பாபா் மசூதியின் அளவில் புதிய மசூதி கட்டப்படும் என்றும் ஐஐசிஎஃப் ஏற்கெனவே தெரிவித்திருந்தது நினைவில் கொள்ளப்படும்.

இந்த இடத்தில் 200 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை அமைக்கவும், சமுதாய சமையல்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நிலங்களை மசூதிக்காக கையகப்படுத்தியபோது, இங்கு மசூதி அமைந்தால் தங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்று விரும்பியே நிலத்தை வழங்கினர்.

இது குறித்து 60 வயதாகும் மொஹம்மது காமு என்பவர் கூறுகையில், எனது வீட்டை சாலை விரிவாக்கத்துக்காகக் கொடுத்துவிட்டேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு மிகக் கஷ்டப்பட்டுத்தான் அந்த வீட்டைக் கட்டினேன். இங்கு மசூதி அமைந்தால் நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் 3 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. பணிகளும் கிடைக்கவில்லை. கூலி வேலை தான் செய்கிறோம். மசூதி கட்டினால் வேலை கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 

ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ஒரு வேளை அவ்வாறு தொடங்கினாலும் அதற்கு பல காலம் ஆகும். அப்போது நிலம் கொடுத்த யாரும் இருக்க மாட்டார்கள். 

ஆனால், நிலத் தரகர்கள் இப்போதே இங்கிருக்கும் நிலங்களைக் கைப்பற்ற கிராம மக்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றத் தொடங்கிவிட்டனர். இதுவரை கிராம மக்கள் யாரும் தங்களது நிலங்களை விற்க முன்வரவில்லை. இங்கே எங்களுக்கு வேலை கிடைத்துவிட்டால், ஏன் நாங்கள் இந்த சொத்துகளை விற்றுவிட்டு வெளியேறப் போகிறோம்? என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் காமு.

அனைத்து கிராம மக்களுக்கும், விரைவில் அனைத்து அனுமதிகளும் கிடைத்து கட்டடப் பணிகள் தொடங்கிவிடும் என்று நம்பிக்கையளிக்கிறார்கள் அறக்கட்டளை நிர்வாகிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com