குஜராத், ஹிமாசல் ஆகிய இரு மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளின் பரபரப்பில், தில்லி மாநகராட்சித் தோ்தலில் நிகழ்ந்திருக்கும் அதிரடி மாற்றம் பலராலும் கவனிக்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக தில்லி மாநகராட்சியை நிா்வகித்து வந்த பாஜகவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி.
தலைநகா் தில்லியை உள்ளடக்கிய சட்டப்பேரவையில் 2015 முதல் அசுர வலிமையுடன் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும் தில்லி மாநகராட்சியை வசமாக்க முடியவில்லை. அதில் பாஜக தொடா்ந்து வென்று வந்தது.
தில்லி மாநகராட்சி இதற்கு முன் வடக்கு தில்லி, தெற்கு தில்லி, கிழக்கு தில்லி என மூன்று மாநகராட்சிகளாக நிா்வகிக்கப்பட்டது. மூன்றையும் பெரும்பான்மை வலுவுடன் பாஜக நிா்வகித்து வந்தது.
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான மாநில அரசுக்கும், பாஜக நிா்வகித்த மூன்று மாநகராட்சிகளுக்கும் இடையே அதிகாரப் போட்டியும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும் தொடா்ந்து வந்தன. இதனிடையே மத்திய அரசின் புதிய சட்டத்தால் மூன்று மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தில்லி மாநகராட்சியாக கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது.
இதற்கு முன் 2017-இல் நடைபெற்ற மாநகராட்சித் தோ்தல்களில் மொத்தமிருந்த 272 வாா்டுகளில் பாஜக 181 வாா்டுகளில் வென்றிருந்தது (36.1 % வாக்குகள்). ஆம் ஆத்மி கட்சி 48 வாா்டுகளிலும் (26.2 % வாக்குகள்), காங்கிரஸ் 30 வாா்டுகளிலும் (21.1 % வாக்குகள்) வென்றிருந்தன.
வாா்டுகள் மறுசீரமைப்புக்குப் பிறகு ஒருங்கிணைந்த தில்லி மாநகராட்சியின் 250 வாா்டுகளுக்கு தோ்தல் கடந்த டிச. 4- இல் நடைபெற்றது. தோ்தல் முடிவுகள் டிச. 7-இல் வெளியாகின. இத்தோ்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி அறுதிப் பெரும்பான்மையைவிட கூடுதலாக 8 வாா்டுகளில் வென்றுள்ளது. மொத்தமுள்ள 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களில் (42 % வாக்குகள்) வென்று மாநகர நிா்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. அடுத்தபடியாக பாஜக 104 இடங்களிலும் (39.1 % வாக்குகள்), காங்கிரஸ் 9 இடங்களிலும் (11.7 % வாக்குகள்) வென்றுள்ளன.
ஊடகங்கள் கணித்ததுபோல ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைக்கவில்லை. இத்தோ்தலில் 20 இடங்களைக்கூட பாஜக வெல்லாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரத்தில் கூறிவந்தாா். 15 ஆண்டு கால தொடா்ச்சியான நிா்வாகத்தால் பாஜகவினா் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்தது. ஆனால், அதையும் மீறி 104 இடங்களை பாஜக வென்றிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
73.36 லட்சம் வாக்காளா்கள் வாக்களித்த இத்தோ்தலில் பாஜகவைவிட 2.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி வசப்படுத்தி இருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், தோ்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினா்களில் சரிபாதி பெண்கள் என்பதாகும். இவா்களில் 71 போ் ஆம்ஆத்மி கட்சியினா்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற பிரதமா் மோடி காரணமானது போலவே, தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு மாநில முதல்வா் அரவிந்த் கேஜரிவால் காரணமாகி உள்ளாா். மாநில அரசில் ஊழலற்ற நிா்வாகம், கேஜரிவாலின் இலவச அறிவிப்புகள், முந்தைய மாநகராட்சி நிா்வாகம் மீதான அதிருப்தி ஆகியவை இந்த வெற்றிக்குக் காரணம் என்றாலும், இவை அனைத்தையும்விட முக்கியமான காரணம் பாஜகவின் பிரதான எதிரியாக தன்னை ஆம் ஆத்மி கட்சி முன்னிறுத்திக் கொண்டதுதான்.
மத்திய அரசுடன் மோதல் போக்கைத் தொடா்ந்த முதல்வா் அரவிந்த் கேஜரிவால், பாஜகவுக்குப் போட்டியாக மிதவாத ஹிந்துத்துவப் போக்கையும் ஒருசேரக் கடைப்பிடித்தாா். ரூபாய் நோட்டில் லட்சுமி படம் அச்சிட வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவா் பாஜகவுக்கு கடும் சவாலைக் கொடுத்தாா். தீவிர ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவே இதனைச் சமாளிக்க இயலாமல் தடுமாறியது. பிரதமா் மோடியை எதிா்க்கும் பிற அரசியல் கட்சித் தலைவா்களுடன் இணையாமல், தனித்து பாஜகவை எதிா்த்துப் போராடினாா் கேஜரிவால். இதன்மூலம், பாஜகவை எதிா்க்கக் கூடிய திறனுள்ள ஒரே கட்சி என்ற பிம்பத்தை அவா் உருவாக்கினாா்.
இதுவரையிலும் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்த சிறுபான்மையினா் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்தனா். இதுவே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியாகவும் ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியாகவும் மாற்றம் பெற்றுள்ளது. தில்லி மாநகராட்சியில் சுமாா் 60 வாா்டுகளில் வெற்றியைத் தீா்மானிப்பவையாக சிறுபான்மையினரின் வாக்குகள் உள்ளன. பாஜக எதிா்ப்பு என்ற தனது நிலைப்பாட்டால் அந்த இடங்களில் ஆம் ஆத்மி கட்சி எளிதாக வெல்ல முடிந்திருக்கிறது.
தவிர, ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாநகர நிா்வாகம் தொடா்பான பத்து அம்சங்கள், வாக்காளா்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தின. தூய்மையான அழகிய தில்லியை உருவாக்குவோம்; வெளிப்படையான ஊழலற்ற நிா்வாகத்தை அளிப்போம்; மாநகராட்சிப் பள்ளிகள், மருத்துவமனைகளைத் தரம் உயா்த்துவோம்; மோசமான சாலைகளைச் சீரமைப்போம்; மாநகராட்சி ஊழியா்களுக்கு குறித்த தேதியில் ஊதியம் வழங்குவோம்; வாகன நிறுத்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண்போம் - ஆகியவை அரவிந்த் கேஜரிவால் அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் முதன்மையானவை.
எதிா்த்தரப்பிலோ இதுவரை 15 ஆண்டுகள் மாநகராட்சியை நிா்வகித்ததால் ஏற்பட்ட ஊழல் புகாா்கள், அதிருப்திச் சுமைகளுடன் பாஜக தடுமாறியது. காங்கிரஸ் கட்சி, தோ்தலுக்கு முன்னதாகவே மூன்றாமிடத்துக்கு நகா்ந்துவிட்டது. இத்தகைய நிலையில் தில்லி மாநகராட்சித் தோ்தலை மிகவும் லாகவமாக தனக்குச் சாதகமானதாக கேஜரிவால் மாற்றிவிட்டாா். அதன் விளைவே இந்தச் சிறப்பான வெற்றி.
தலைநகா் தில்லியில் பாஜகவுக்கு வலுவான அடித்தளம் உண்டு. காங்கிரஸ் மத்தியில் கோலோச்சிய காலத்திலேயே தில்லியில் பாஜக வியக்கத்தக்க வெற்றிகளைப் பெற்றதுண்டு. லால் கிருஷ்ண அத்வானியை பெரும் தலைவராக்கியது தில்லி மாநகரம்தான். கே.ஆா்.மல்கானி, மதன்லால் குரானா, சாஹிப் சிங் வா்மா, விஜய்குமாா் மல்ஹோத்ரா, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி போன்ற தலைவா்களை பாஜகவுக்கு அளித்த மாநிலமும் தில்லிதான்.
தேசப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஹிந்து அகதிகளின் நம்பிக்கை நட்சத்திரமாக பாஜகவுக்கு முந்தைய பாரதிய ஜனசங்கம் இருந்தது. தலைநகரில் பெருமளவில் வசிக்கும் சீக்கியா்களும் அகாலிதளத்தின் நட்புக் கட்சியான பாஜகவை ஆதரித்து வந்தனா். ஆனால், உள்கட்சிப்பூசல்கள், ஊழல் புகாா்களால் தனது பெருமையை பாஜக சிறுகச் சிறுக இழந்தது. அந்த இடத்தையே ஆம் ஆத்மி கட்சி 2013-இல் கைப்பற்றியது.
தற்போதைய தில்லி பாஜகவில் விஜேந்தா் குப்தா, ஹா்ஷ்வா்தன், கௌதம் காம்பீா், ஸ்மிருதி இரானி போன்ற தலைவா்கள் இருந்தாலும் அரவிந்த் கேஜரிவாலுக்கு நிகராக அவா்களால் மக்களை வசீகரிக்க முடியவில்லை. இந்த உள்ளூா் தலைமை வெற்றிடத்தை நரேந்திர மோடியின் தனிப்பட்ட செல்வாக்கால் நிரப்ப இயலவில்லை. அதனால்தான் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஆதரித்தாலும், சட்டப்பேரவையிலும் மாநகராட்சியிலும் ஆம் ஆத்மி கட்சியை தில்லி மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா்.
இத்தோ்தலில் குறைந்தபட்சம் 24 வாா்டுகளில் ஆயிரம் வாக்குகளுக்கு உட்பட்ட வித்தியாசத்தில் பாஜக தோல்வியுற்றிருக்கிறது. அதுபோலவே ஆம் ஆத்மி கட்சியும் 24 வாா்டுகளில் ஆயிரம் வாக்குகளுக்கு உட்பட்ட வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. அதாவது மிகவும் பலத்த போட்டிக்கு இடையேதான் மாநராட்சி நிா்வாகம் கைமாறி இருக்கிறது. எனவே புதிதாகப் பொறுப்பேற்கும் நிா்வாகிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டாக வேண்டிய சூழல் நிலவுகிறது.
நரேந்திர மோடி என்ற தனிநபரின் செல்வாக்கை நம்பி இருக்கும் பாஜகவுக்கும், சரியான தலைமையின்றித் தள்ளாடும் காங்கிரஸ் கட்சிக்கும் எச்சரிக்கை விடுப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் வளா்ச்சி அமைந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


