மகிழ்ச்சியான செய்தி: சாதாரண டிக்கெட்டிலும் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாம்!

விரைவு ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு, அதே ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலை என்பது இனி இல்லை.
மகிழ்ச்சியான செய்தி: சாதாரண டிக்கெட்டிலும் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாம்!
மகிழ்ச்சியான செய்தி: சாதாரண டிக்கெட்டிலும் முன்பதிவு பெட்டியில் பயணிக்கலாம்!


விரைவு ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணம் செய்ய டிக்கெட் எடுத்துவிட்டு, அதே ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க முடியாத நிலை என்பது இனி இல்லை.

தெற்கு ரயில்வே இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் தகவலின்படி, விரைவு ரயில்களில் குறுகிய தூரப் பயணிகள் வழக்கமாக முன்பதிவு டிக்கெட் எடுக்க மாட்டார்கள். மாறாக சாதாரண டிக்கெட் வைத்திருப்பார்கள். இவர்கள் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் மட்டுமே பயணிக்க முடியும். இந்த பெட்டிகளில் வழக்கமாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அன்றாடம் பணிக்குச் செல்வோர் கடும் சிரமத்துக்கு உள்ளாவார்கள்.

எனவே, சாதாரண டிக்கெட் வைத்திருப்பவர்களும் விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யும் வசதியை நடைமுறைப்படுத்தியிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்திருப்பது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

பயணிகளின் தேவை மற்றும் வசதியை மேம்படுத்தும் வகையில், தெற்கு ரயில்வே பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு நடவடிக்கையாகவே, இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவித்திருக்கும் இந்த திட்டத்தின் மூலம், கூடுதலான பயணிகள் பயணிக்க வசதி ஏற்படும். இதற்காக உருவாக்கப்பட்டிருப்பதுதான் டிரிசர்வ்டு பெட்டிகள். பகல் நேரத்தில், மிகக் குறுகிய தொலைவுக்குப் பயணிக்கும் ரயில் பயணிகள் இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க முடியும். தற்போதைக்கு, தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 24 விரைவு ரயில்களில் குறைந்தது 1 அல்லது 2 டிரிசர்வ்டு பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைத்துள்ளது.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் ஆகின்றன. இவற்றை, பகல் நேரத்தில் நாள்தோறும் ரயிலில் பயணிக்கும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். விரைவில் மற்ற ரயில்களுக்கும் இந்த டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்படவிருக்கின்றன. அதேவேளையில், சாதாரண டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தெந்த ரயில்களில்..

சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரயில்களில் எஸ்.11, 12 பெட்டிகள் திருநெல்வேலி - கொல்லம் வரை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

எழும்பூர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலிலும் எஸ் 12, 13  பெட்டிகள் மானாமதுரை - ராமேஸ்வரம் வரை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

மங்களூர் விரைவு ரயிலில் திருச்சி - மங்களூர் வரை எஸ் 7 , 8, 9, 10 பெட்டிகள் (ஒரு வழித்தடத்தில்)டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

இதே ரயில் எழும்பூர் திரும்பும் போது எஸ் 10 பெட்டி மட்டும் டிரிசர்வ்டு பெட்டியாக இருக்கும்.

தூத்துக்குடி - மைசூர் இடையேயான விரைவு ரயிலில் தூத்துக்குடி - மதுரை வரை எஸ் 4, 10, 11, 13 ஆகியவை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகள்.

கன்னியாகுமரி - பெங்களூர் ரயிலில் கன்னியாகுமரி - எர்ணாகுளம் வரை எஸ் 6,7 ஆகியவை (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

நாகர்கோவில் விரைவில் ரயிலில் திருநெல்வேலி - நாகர்கோவில் வரை எஸ்11,12 பெட்டிகள் (இரு வழித்தடத்திலும்) டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும்.

இந்த டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க சாதாரண டிக்கெட்டை விட கூடுதலாக 20 ரூபாய் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com