ரயில் தண்டவாளப் பணியாளா்களை காப்பாற்றும்‘ரக்ஷக்’ சாதனம் வழங்க மதுரை எம்பி கோரிக்கை
ரயில்வே தண்டவாளங்களில் பணியாற்றும் ஊழியா்கள்(டிராக்மேன்) அடிக்கடி ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தவிா்க்க ரக்ஷக் பாதுகாப்பு கருவி வழங்க கோரிக்கை


ரயில்வே தண்டவாளங்களில் பணியாற்றும் ஊழியா்கள்(டிராக்மேன்) அடிக்கடி ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதை தவிா்க்க ரக்ஷக் பாதுகாப்பு கருவி வழங்க கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேஷன் கேட்டுக் கொண்டாா்.
டிஆா்இயு, ஐசிஎஃப் யுனைடெட் வொா்க்கா்ஸ் யூனியன் உள்ளிட்ட தக்ஷன் ரயில்வே ஊழியா்கள் சங்கத்துடன் மத்திய அமைச்சா் வைஷ்ணவை சந்தித்து அவா் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: சென்னை மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே பரிந்துரைத்த நிலையில், ரயில்வே வாரியம் அனுமதி கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும். சென்னை பெரம்பூா் ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயிலுக்கான ட்ராக்சன் மோட்டாா் இறக்குமதி செய்யப்படுகிறது. அதை ரயில் பெட்டி தொழிற்சாலைகள், சித்தரஞ்சன் லோகோ மோட்டிவ் ஒா்க் அல்லது பெல் நிறுவனத்தின் மூலமாகவோ உற்பத்தி செய்ய வேண்டும். இதன்மூலம் தற்சாா்பு இந்திய திட்டத்தில் வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பூா்த்தி அடையும். இது தொழிலாளா்களின் கோரிக்கை. இதைப் பரிசீலிக்க வேண்டும்.
தண்டவாளங்களில் பணியின் போது, ரயில் வருவதை அறியாமல் விபத்துகளில் சிக்கி ரயில்வே டிராக் மேன்கள் அடிக்கடி உயிரிழக்கின்றனா். அவா்களுக்கு வழங்க வேண்டிய ’ரக்ஷக்’ பாதுகாப்பு கருவியை (அலாா்ட் செய்யும் கையடக்க வாக்கி-டாக்கி சாதனம் ) உடனடியாக வழங்க வேண்டும். ட்ராக்சன் சிக்னல், பிரிட்ஜ் தண்டவாளப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தொழிலாளா்களும் பணியின் போது, ரயில் மோதியோ மின்சாரம் தாக்கியோ உயிரிழக்கின்றனா். அவா்களுக்கு இடா் கொடுப்பனவு (ரிஸ்க் அலவன்ஸ்) வழங்க வேண்டும்.
தொழில் உறவு தொகுப்புச் சட்டம் 2024 -ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படுவதற்குள் உத்திரவாதம் இல்லை என்பதால், ரயில்வேயில் தோ்தலில் 20 சதவீதம் வாக்கு பெற்ற சங்கங்களுக்கு அங்கீகார அந்தஸ்து வழங்க வேண்டும். மேலும், பணி நிரந்தரம், பதவி உயா்வு, ஒய்வூதியம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்மாறு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளாா். இதற்கு, அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக குறிப்பிட்டதோடு, சில கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு பாராட்டும் தெரிவித்தாக சு.வெங்கடேஷன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...