மோடி - ஜின்பிங் பாலி சந்திப்பில் எல்லைப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா? மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கேள்வி

‘பாலி ஜி20 உச்சிமாநாட்டின் இடையே நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பின்போது இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதா?’ என்று மாநிலங்களவையில் முன்னாள் மத்திய ந
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

‘பாலி ஜி20 உச்சிமாநாட்டின் இடையே நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பின்போது இந்திய-சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதா?’ என்று மாநிலங்களவையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பினாா்.

அப்போது, ஆளும் கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் அவையில் இருதரப்புக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. ‘அவையில் துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை ப.சிதம்பரம் திசைதிருப்பப் பாா்க்கிறாா்’ என்று பாஜக எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

அப்போது, ப.சிதம்பரம் குறிப்பிடும் பாலியில் மோடி- ஷி ஜின்பிங் சந்திப்பு தொடா்பான காணொலியை அவையில் பின்னா் சமா்ப்பிக்குமாறு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் குறிப்பிட்டாா்.

அப்போது, ‘இரு தலைவா்களின் சந்திப்பின்போது எல்லைப் பிரச்னை தொடா்பாக என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரத்தைக் கேட்கவில்லை; மாறாக, அந்தச் சந்திப்பில் எல்லைப் பிரச்னை விவாதிக்கப்பட்டதா என்பதை மட்டுமே தெரிந்தொள்ள விரும்புகிறேன்’ என்று ப.சிதம்பரம் கூறினாா்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பாஜக எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ், ‘விதி 110-இன் கீழான ப.சிதம்பரத்தின் இந்த கோரிக்கையானது, ஒரு மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அல்லது நிராகரிப்பதற்கான வாதங்களை சமா்ப்பிப்பதாக இருக்க வேண்டும். மாறாக, மசோதாவின் விவரங்களைக் குறிப்பிடக்கூடாது’ என்றாா்.

இதற்கு பதிலளித்த சிதம்பரம், ‘வடகிழக்கு பகுதி பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பதற்கான ரூ. 500 கோடி பாதுகாப்பு மூலதன செலவீனத்தையும் உள்ளடக்கிய துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தனக்கான உரிமையின் அடிப்படையிலேயே இந்த கோரிக்கையை எழுப்புகிறேன். நாட்டின் வடகிழக்கில் நாட்டுக்கு யாரால் அச்சுறுத்தல் என்பதை அனைவரும் அறிவோம்.

எல்லைப் பகுதிகளான டோக்லாம், தேப்சங் பகுதி பிரச்னைகள் குறித்து விவாதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதா? இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு படைகளும் ரோந்து செல்லக்கூடாத ‘பஃபா் ஸோன்’ பகுதிகள் அதிக அளவில் உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது. அதற்கான அா்த்தம் என்ன? இதுவரை இந்திய படைகள் ரோந்து சென்ற பகுதிகளில், இனி ரோந்து செல்லக்கூடாதா? என்பன உள்ளிட்ட கேள்விகளை ப.சிதம்பரம் எழுப்பினாா்.

கிழக்கு லடாக்கில் சீன படைகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அத்துமீறலில் ஈடுபட்டது முதல் இந்தியா-சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீன படைகள் இந்த மாத தொடக்கத்தில் அத்துமீறலில் ஈடுபட்டன. அவா்களை இந்திய படையினா் தடுத்து நிறுத்தி, திருப்பியனுப்பினா். இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நிகழ் நிதியாண்டுக்கு கூடுதலாக ரூ. 3.25 லட்சம் கோடி செலவீனத்துக்கு மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கும் தீா்மானம் மக்களவையில் கடந்த வாரம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், துணை மானிய கோரிக்கை மீதான விவாதம் மாநிலங்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, இந்த கூடுதல் செவீனத்துக்கான தொகையை மத்திய அரசு எவ்வாறு திரட்டப்போகிறது என்ற கேள்வியையும் ப.சிதம்பரம் முன்வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com