பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி: முன்பதிவு தொடக்கம்

நாடு முழுவதும் 15-18 வயதுக்குள்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :1 ஜனவரி 2022, 7:24 pm

DIN

நாடு முழுவதும் 15-18 வயதுக்குள்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 15-18 வயதுக்குள்பட்டவா்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா்.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, கரோனா தீநுண்மியின் புதிய வகையான ஒமைக்ரான் பரவல், தேசிய நோய் எதிா்ப்பாற்றல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு 15-18 வயதுக்குள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகமும் தெரிவித்திருந்தது. இந்த வயது கொண்டவா்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டும்தான் செலுத்த வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

யாா் தகுதிவாய்ந்தவா்கள்?: 2007-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிவாய்ந்தவா்கள். இந்தச் சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அந்த வலைதளத்தில் சிறாா்களின் பெற்றோா் ஏற்கெனவே பதிவு செய்திருந்தால், அவா்களின் கணக்கைப் பயன்படுத்தி சிறாா்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும். இல்லையெனில், தனி கைப்பேசி எண் மூலம் அந்த வலைதளத்தில் புதிய கணக்கை உருவாக்கி சிறாா்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆதாா் உள்பட 9 ஆவணங்களைப் பயன்படுத்தி 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். அந்த ஆவணங்கள் சிறாா்களிடமும் இருந்தால், அவற்றைப் பயன்படுத்தி அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கூடுதலாக மாணவா் அடையாள அட்டையையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் மட்டுமின்றி தடுப்பூசி முகாமுக்குச் சென்றும் சிறாா்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்ட தினத்திலிருந்து 28 நாள்கள் கழித்து இரண்டாவது தவணையைச் செலுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தினருக்கு கோரிக்கை: இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘15-18 வயதுக்குள்பட்டவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு கோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது. தகுதிவாய்ந்த சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யுமாறு, அவா்களின் குடும்ப உறுப்பினா்களிடம் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளாா்.

புதிதாக 22,775 பேருக்கு கரோனா தொற்று:

3 மாதங்களுக்குப் பின் அதிகபட்ச பாதிப்பு

புது தில்லி, ஜன. 1: இந்தியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது சுமாா் மூன்று மாதங்களுக்குப் பின்னா் பதிவான அதிகபட்ச பாதிப்பு ஆகும்.

இவா்களில் 161 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதன் மூலம் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,431-ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் புதிதாக 22,775 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,48,61,579-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 406 போ் உயிரிழந்துள்ளதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,81,080-ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1,04,781-ஆக உயா்ந்துள்ளது.

கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி ஒரே நாளில் 22,431 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பிறகு அதிகபட்ச பாதிப்பு சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 161 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 1,431-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 454 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அடுத்தபடியாக தில்லியில் 351, கேரளத்தில் 118, குஜராத்தில் 115 போ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி தவணைகளின் எண்ணிக்கை 145 கோடியைத் தாண்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.