குஜராத்தின் சோமநாதபுரத்தில் புதிய சுற்றுலா மாளிகை: திறந்து வைத்தார் பிரதமர்

குஜராத் மாநிலம்  சோமநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார். 
குஜராத்தின்  சோமநாதபுரத்தில் புதிய சுற்றுலா மாளிகை: திறந்து வைத்தார் பிரதமர்
குஜராத்தின் சோமநாதபுரத்தில் புதிய சுற்றுலா மாளிகை: திறந்து வைத்தார் பிரதமர்
Published on
Updated on
2 min read

புது தில்லி: குஜராத் மாநிலம்  சோமநாதபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று திறந்துவைத்தார். 

குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேல், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 சோமநாதபுரத்தில் அமைந்துள்ள கோயிலுக்கு அருகிலேயே ரூ.30 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. சொகுசு அறைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், டீலக்ஸ் அறைகள், மாநாட்டு கூடம், கலையரங்கம் உள்ளிட்ட உயர்தர வசதிகளுடன் இந்த புதிய மாளிகை கட்டப்பட்டுள்ளது.

இந்த புதிய மாளிகையின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் கடற்கரை தெரியும் வகையில் இந்த மாளிகையின் நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர்,  சோமநாதபுரத்தில் சுற்றுலா மாளிகை திறக்கப்பட்டிருப்பதற்கு, குஜராத் அரசு,  சோமநாதபுர கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். நாசக் காலங்களிலும் பெருமிதத்துடன் எழுந்து நின்ற இந்தியாவின் மனஉறுதியை, கோயிலின் கோபுரத்தின் மூலம் பக்தர்கள் உணர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

நூற்றுக்கணக்கான ஆண்டு அடிமையாக இருந்த காலகட்டங்கள் மற்றும் இந்திய நாகரீக பயணத்தில் எழுந்த சவால்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், சோம்நாத் கோயில் இடிக்கப்பட்ட சூழல் மற்றும் இந்த கோயில் சர்தார் பட்டேலின் முயற்சிகளால் புனரமைக்கப்பட்ட சூழல் ஆகிய இரண்டிலும் பெரும் தகவல் அடங்கியுள்ளது. “தற்போது, சுதந்திரப் பெருவிழாவை கொண்டாடும் வேளையில், நமது கடந்த கால அனுபவங்கள், கலாச்சார பெருமைமிக்க இடங்கள் மற்றும் சோம்நாத் போன்ற நம்பிக்கைக்குரிய இடங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்” எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆன்மீக தலங்களின் சிறப்பை எடுத்துரைக்கும் மெய்நிகர் பாரத் தர்ஷன் பற்றி விளக்கிய பிரதமர்,  சோமநாதபுரம், துவாரகா, கட்ச் வளைகுடா, குஜராத்தின் ஒற்றுமைச் சிலை: உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி, மதுரா, காசி, பிரயாக், குஷிநகர்; தேவபூமியான உத்தராகண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத்; இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள ஜூவாலாதேவி, நயினா தேவி: பக்தி மற்றும் இயற்கை எழில் மிகுந்த ஒட்டு மொத்த வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், ஒடிசாவில் உள்ள பூரி; ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள திருப்பதி பாலாஜி, மகாராஷ்டிராவின் சித்தி விநாயகர், கேரளாவின் சபரிமலை போன்ற புனிதத் தலங்களை பட்டியலிட்டார். 

“இந்த இடங்கள் நமது தேச ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட பாரதம் வலிமையான பாரதம் என்பதை பிரதிபலிக்கின்றன.  கடந்த 7 ஆண்டுகளில் சுற்றுலாவின் முழுத்திறனையும் பயன்படுத்த அயராது பணியாற்றி இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். “தற்போது, சுற்றுலா மையங்களின் மேம்பாடு அரசுத் திட்டங்கால் மட்டுமின்றி, பொதுமக்கள் பங்கேற்பு இயக்கத்தின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டின் பாரம்பரிய இடங்கள் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியமிக்க இடங்களின் மேம்பாடு இதற்கு சிறந்த உதாரணமாகும்”. மையக்கரு சார்ந்த 15 சுற்றுலா சுற்றுத்தடம் அவர் பட்டியலிட்டார். உதாரணமாக, ராமாயண சுற்றுப்பாதையில் பகவான் ராமருடன் தொடர்புடைய இடங்களைக் காணலாம். இதற்காக சிறப்பு ரயிலும் விடப்பட்டுள்ளது. தில்லியிலிருந்து திவ்யகாசி யாத்திரைக்கான இந்த சிறப்பு ரயில் நாளை புறப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அதே போன்று புத்தர் சுற்றுத்தடம், புத்தபிரானுடன் தொடர்புடைய இடங்களுக்குச் செல்வதை எளிதாக்குகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பதுடன் தடுப்பூசி இயக்கத்தில் சுற்றுலா தலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சுற்றுலாவை முழுமையான வகையில் காண்பதை நாடு தற்போது எதிர்நோக்கியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முதலில் தூய்மை – முன்பு நமது சுற்றுலா தலங்கள், புனித யாத்திரை தலங்கள், சுகாதாரமற்றவையாக இருந்தன. தற்போது தூய்மை இந்தியா திட்டம் இந்த நிலையை மாற்றியமைத்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிப்பதில் மற்றொரு முக்கிய அம்சம் பயண வசதிகள்தான். ஆனால் இந்த வசதிக்கான வாய்ப்புகளை சுற்றுலா தலங்களோடு மட்டும் நிறுத்தி விடக் கூடாது. போக்குவரத்து, இணையதள வசதி. சரியான தகவல், மருத்துவ ஏற்பாடு போன்ற அனைத்து வசதிகள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இந்த வகையில் நாட்டில் அனைத்து வகையான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாவை அதிகரிப்பதில் மூன்றாவது முக்கிய அம்சம் நேரம் ஆகும்.

“உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்” என்ற தமது அழைப்பை குறுகிய நோக்கமுடையதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொண்ட பிரதமர், இந்த அழைப்பு உள்ளூர் சுற்றுலாவையும் உள்ளடக்கியதுதான் என்றார். வெளிநாட்டு சுற்றுலாவை மேற்கொள்வதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள 15 – 20 இடங்களுக்காவது செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com