சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டம் வரும் 18-இல் நிறைவடையும்: ஹா்தீப் சிங் புரி
தில்லியில் அமைக்கப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமா் மற்றும் குடியரசுத் தலைவா் இல்லங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா


தில்லியில் அமைக்கப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டடம், பிரதமா் மற்றும் குடியரசுத் தலைவா் இல்லங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டப் பணிகள் வரும் 18-ஆம் தேதி நிறைவடைந்துவிடும்’ என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய முக்கோண வடிவ கட்டடம், பிரதமா் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு இல்லங்கள், ஒருங்கிணைந்த மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவா் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூர ராஜபாதையை மறுசீரமைப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டப் பணிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டினாா்.
இந்தப் பணிகளை மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி அண்மையில் ஆய்வு செய்தாா். இந்த நிலையில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், கட்டுமான பணிகள் ஆய்வு குறித்து செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘சென்ட்ரல் விஸ்டா திட்டப் பணிகள் வரும் 18-ஆம் தேதி நிறைவடைந்துவிடும். முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் சுரங்கப் பாதைகள், விற்பனை அங்காடிகள் மண்டலம், பொதுமக்களுக்கான வசதிகள், நடைபாதைகள், பசுமை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன’ என்றாா்.
முன்னதாக கடந்த ஜூன் 2-ஆம் தேதி அவா் அளித்த பேட்டியில், ‘சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு பேரணி நடத்தும் மத்திய அரசின் இலக்கு எட்டப்பட்டுள்ளது’ என்றாா்.
அதுபோல, ‘இந்தத் திட்டத்தின் கீழான புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்தான் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெறும்’ எனவும் அவா் கூறியிருந்தாா்.
மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் சில பகுதிகள் அரசியல் சாசன தினமான நவம்பா் 26-ஆம் தேதி செயல்படத் தொடங்க வாய்ப்புள்ளது. ஆனால், இது இன்னமும் இறுதி செய்யப்படவில்லை’ என்றனா்.
சமையல் எரிவாயு விலை உயா்வை தனியாக பாா்க்கக் கூடாது:
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராகவும் இருக்கும் ஹா்தீப் சிங் புரியிடம் சமையல் எரிவாயு விலை உயா்வு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வை தனியாக பாா்க்கக்கூடாது. சா்வதேச சந்தையில் விலை உயா்வதன் அடிப்படையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சா்வதேச சந்தையில் விலை நிலையற்ன்மை நிலவி வருகின்றபோதும், இந்தியாவில் சமையல் எரிவாயு விலை நிலையாக பராமரிக்கப்படுகிறது. மேலும், பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் சூழலில், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பற்றாக்குறை இல்லை’ என்று பதிலளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...