ஷின்சோ அபே மீதான தாக்குதல்: பிரதமர் மோடி வேதனை

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் குறித்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஷின்சோ அபே மீதான தாக்குதல்: பிரதமர் மோடி வேதனை


புது தில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் குறித்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்காக தான் பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது மார்புப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தில் வெள்ளத்தில் ஷின்சோ அபே கீழே சாய்ந்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். தற்போது சுயநினைவை இழந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, எனது அன்பு நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் குறித்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 

"எனது அன்பு நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில், மே மாதம் டோக்கியோவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி அபேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அபே மீதான மோடியின் நல்லெண்ணத்தையும் தனிப்பட்ட மரியாதையையும் காண முடிந்தது.

பிரதமராக அபே பலமுறை இந்தியா வந்துள்ளார். 2007 இல் தனது சுற்றுப்பயணத்தின் போது, ​​அபே இந்திய நாடாளுமன்றத்தில் முகலாய இளவரசர் தாரா ஷிகோவை மேற்கோள் காட்டி இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையேயான தொடர்பை எடுத்துரைத்து பேசினார். 

2014 இல், 65 ஆவது குடியரசு நாள் அணிவகுப்பில் அபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டார், இந்திய குடியரசு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த ஜப்பானின் முதல் பிரதமர் அபே. அவரது பயணத்தின் போது, ​​சுற்றுலாவை மேம்படுத்துதல், தொலைத்தொடர்பு கோபுரங்களில் எரிசக்தி திறனை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவில் மின் உற்பத்தி உள்ளிட்ட 8 ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. அபே 2015 இல் வாரணாசியில் பிரதமர் மோடியுடன் 'கங்கா ஆரத்தி' நடத்தினார். 

ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, உடல்நலக் காரணங்களுக்காக 2020 இல் பதவி விலகினார். 2006-07 மற்றும் 2012-20 வரை இரண்டு முறை ஜப்பானின் பிரதமராக இருந்தார். அவருக்குப் பின் யோஷிஹிட் சுகாவும், பின்னர் ஃபுமியோ கிஷிடாவும் பதவியேற்றனர்.

இந்நிலையில், ஜப்பானின் முன்னணி செய்தி நிறுவனமான கியோடோ நியூஸ், அபே சுயநினைவின்றி இருப்பதாகவும், முக்கிய அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்றும், அவருக்கு "இதய நுரையீரலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக" அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com