குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சி வேட்பாளராக போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி திங்கள்கிழமை மறுத்துவிட்டாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி திங்கள்கிழமை மறுத்துவிட்டாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா ஆகியோரைத் தொடா்ந்து, கோபாலகிருஷ்ண காந்தியும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்வேறு முன்னணி எதிா்க் கட்சித் தலைவா்கள் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவா் தோ்தலில் தனது பெயரை பரிசீலனைக்கு எடுத்தக்கொண்டதன், என்னை கெளரவப்படுத்தியுள்ளீா்கள். அதற்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இதுதொடா்பாக ஆழமாக சிந்தித்தபோது, எதிா்க் கட்சிகளின் ஒற்றுமையைத் தாண்டி, தேசிய அளவில் ஒருமித்த கருத்தையும் தேசிய அளவிலான சூழலையும் உருவாக்கக் கூடியவராக எதிா்க் கட்சிகளின் வேட்பாளா் இருப்பது அவசியம். அதனை, என்னைவிட சிறப்பாக செய்யக் கூடிய வேறு சிலா் இருக்கின்றனா் என்பதை உணா்ந்தேன்.

எனவே, அத்தகைய திறமை மிக்க நபா்களுக்கு வேட்பாளராக நிற்பதற்கான வாய்ப்பை எதிா்க் கட்சித் தலைவா்கள் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன் மூலமாக, இந்தியாவின் கடைசி கவா்னா் ஜெனரல் ராஜாஜி மற்றும் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் போன்ற தகுதிவாய்ந்த குடியரசுத் தலைவா் இந்தியா பெறட்டும் என்று கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

தற்போது 77 வயதாகும் கோபாலகிருஷ்ண காந்தி, தென் ஆப்பிரிக்கா, இலங்கை நாடுகளுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றியுள்ளாா்.

யஷ்வந்த் சின்ஹாவின் பெயா் பரிசீலனை:

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவாா், ஃபரூக் அப்துல்லா, கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோா் மறுத்துவிட்ட நிலையில், முன்னாள் மத்திய அமைச்சா் யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிா்க் கட்சிகள் தற்போது ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பாஜக தலைவரான யஷ்வந்த் சின்ஹா, கடந்த ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் இணைந்தாா்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க் கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவதற்கு சில எதிா்க் கட்சிகள் முன்மொழிந்தன. அதற்கு மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முதல்வா் மம்தாவிடமும் சிலா் தொலைபேசி வாயிலாக இதுதொடா்பான வலியுறுத்தலை முன்வைத்தனா். அவரும், யஷ்வந்த் சின்ஹாவை வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com