/

விறுவிறுப்படையும் குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று

News image
Updated On :21 ஜூன் 2022, 11:23 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) போட்டியிடுவார் என்று அக்கட்சி செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
 குடியரசுத் தலைவராக இவர் தேர்வானால் நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.
 குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று பாஜக கருதுகிறது.
 மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளான, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவற்றின் ஆதரவும் கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
 நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.
 இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தலைமையில் தில்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
 பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.பி. நட்டா, "நாடு முழுவதும் உள்ள சுமார் 20 முக்கியப் பிரமுகர்களின் பெயர்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவில் இருக்கும் தலைவருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒடிஸாவை சேர்ந்த பழங்குடியினப் பெண் தலைவரான திரௌபதி முர்மு, குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்த பின்புதான் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார்' என்றார்.
 ஒடிஸாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான மயூர்பஞ்சில் உள்ள பய்டாபோசி கிராமத்தில் 1958, ஜூன் 20-ஆம் தேதி திரௌபதி முர்மு பிறந்தார். சாந்தல் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவரான திரௌபதி தனது அரசியல் வாழ்க்கையை மாநகராட்சி கவுன்சிலராக தொடங்கினார். ராய்ரங்பூர் தேசிய ஆலோசனை கவுன்சில் துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.
 2013-இல் பாஜக பழங்குடியினர் பிரிவின் துணைத் தலைவராக திரௌபதி முர்மு பதவி வகித்துள்ளார். ஒடிஸாவின் ராய்ரங்பூர் தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக அவர் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.
 பாஜக கூட்டணியுடன் பிஜு ஜனதாதளம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது முதல்வர் நவீன் பட்நாயக் அரசில் 2000-2004 வரையில் திரௌபதி முர்மு அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். வர்த்தகம், போக்குவரத்து, மீன், கால்நடைத் துறைகளின் அமைச்சராக அவர் இருந்துள்ளார்.
 2015, மே 18-இல் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக திரௌபதி முர்மு பொறுப்பேற்றார். 2021, ஜூலை 12 வரை ஆளுநர் பதவியை அவர் வகித்தார்.
 2017 குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் திரௌபதி முர்முவின் பெயர் பரிசீலனையில் இருந்தது. எனினும், அப்போதைய பிகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
 திரௌபதி முர்முவின் கணவர் ஷியாம் சரண் முர்மு, இரண்டு மகன்கள் உயிரிழந்துவிட்டனர். அவருக்கு மகள் மட்டும் உள்ளார்.
 மோடி வாழ்த்து: "வாழ்வில் வறுமை, துன்பங்களைக் கடந்த லட்சக்கணக்கான மக்கள் திரௌபதி முர்முவின் வாழ்க்கை அனுபவத்தைக் கண்டு வலிமை பெறுவார்கள். அரசுத் திட்டங்கள், இயற்கை குறித்து அவரது புரிந்துணர்வு நாட்டுக்குப் பயனளிக்கும். சிறந்த குடியரசுத் தலைவராக அவர் இருப்பார்' என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.