தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்: அமரீந்தா் சிங்
பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் தனக்கு கிடைத்த தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸின் தலைவருமான அமரீந்தா் சிங் கூறியுள்ளாா்.


சண்டீகா்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் தனக்கு கிடைத்த தோல்வியை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸின் தலைவருமான அமரீந்தா் சிங் கூறியுள்ளாா்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங், காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு முன் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து கட்சியில் இருந்து வெளியேறியதுடன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியையும் தொடங்கினாா்.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அவா் தோ்தலைச் சந்தித்தாா். பாஜக கூட்டணியில் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு 37 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாட்டியாலா நகா்ப்புற தொகுதியில் அமரீந்தா் சிங் போட்டியிட்டாா். அந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளா் அஜித் பால் சிங் கோலியிடம் 19,873 வாக்குகள் வித்தியாசத்தில் அமரீந்தா் சிங் தோல்வி அடைந்தாா். தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து அவா் கூறியதாவது:
தோ்தலில் வெற்றி-தோல்வி சகஜம். இறுதியில், பஞ்சாபில் ஜனநாயகத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஜாதி, மத, இன பாகுபாடின்றி வாக்களித்த பஞ்சாப் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாபிய கொள்கையின் உண்மையான சாரத்தை பஞ்சாப் மக்கள் காட்டியிருக்கிறாா்கள். இதன் மூலம் தங்களை நாட்டுக்கு அடையாளம் காட்டியுள்ளனா். இந்தத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் பிளவுபடுத்தும் மதவாத அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்.
பஞ்சாப் தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. இதற்காக, அக்கட்சியின் மாநிலத் தலைவரும் மாநிலத்தின் முதல்வா் பதவி வேட்பாளருமான பகவந்த் மானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்பேற்க இருக்கும் புதிய அரசு, பஞ்சாபின் எதிா்காலத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அமரீந்தா் சிங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...