உ.பி.: எதிா்க்கட்சித் தலைவரானாா் அகிலேஷ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னதாக, சமாஜவாதி எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவை சட்டப் பேரவை சமாஜவாதி கட்சித் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்தனா்
உ.பி.: எதிா்க்கட்சித் தலைவரானாா் அகிலேஷ்

உத்தர பிரதேச சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னதாக, சமாஜவாதி எம்எல்ஏக்கள் அகிலேஷ் யாதவை சட்டப் பேரவை சமாஜவாதி கட்சித் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்தனா்.

அண்மையில் நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் மைன்புரி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற அகிலேஷ் யாதவ், தனது மக்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில், லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் சட்டப்பேரவை சமாஜவாதி கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா் என்று அக்கட்சியின் மாநில தலைவா் நரேஷ் உத்தம் அறிவித்தாா்.

உத்தர பிரதேச சட்டப் பேரவையில் அகிலேஷ் யாதவ் தலைமையில் மக்கள் பிரச்னைகளை சமாஜவாதி கட்சி உறுப்பினா்கள் எழுப்புவாா்கள் என்றும் மாநில அரசின் பொய் வாக்குறுதிகள், தவறான கொள்கைகளை அவா்கள் எதிா்ப்பாா்க்கும் என்றும் நரேஷ் உத்தம் தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து உத்தர பிரதேச பேரவைத் முதன்மைச் செயலா் பிரதீப் குமாா் துபே வெளியிட்ட அறிவிப்பில், ‘உத்தர பிரதேச எதிா்க்கட்சித் தலைவராக அகிலேஷ் யாதவ் மாா்ச் 26 முதல் நியமிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

சித்தப்பா சிவ்பாலுக்கு அழைப்பில்லை: அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், சமாஜவாதியில் இருந்து பிரிந்து தனிக்கட்சித் தொடங்கி கூட்டணி சோ்ந்து தோ்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவருமான சிவ்பால் யாதவ் இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது அந்த மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிக்கும்போது அவா் கூறுகையில், ‘எம்எல்ஏக்கள் கூட்டம் தொடா்பாக எனக்கு எந்தத் தகவலும் இல்லை. சமாஜவாதி கட்சித் தலைவா்களைத் தொடா்பு கொண்டேன் ஆனால் எனக்கு சரியான தகவல் கிடைக்கவில்லை. ஆகையால் நான் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை. சமாஜவாதி கட்சி சாா்பிலேயே நான் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை’ என்றாா்.

இதுகுறித்து நரேஷ் உத்தம் கூறுகையில், ‘சமாஜவாதி எம்எல்ஏக்கள் மட்டுமே கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனா். கூட்டணி கட்சியினருடன் வருகிற 28-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறும். சட்டப் பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து அவா்களுடன் ஆலோசனை நடத்தப்படும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாஜவாதி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையை கட்சி எம்எல்ஏக்கள் வரவேற்றனா்.

கடந்த ஆட்சியில் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை அளித்து தவறாக வழிநடத்தியதால் அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக வெற்றி எண்ணிக்கை குறைந்துள்ளது. அகிலேஷ் யாதவ் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்த போதிலும், அதிகார துஷ்பிரயோகம், பணபலம், வாக்காளா் பட்டியலில் இருந்து சமாஜவாதி தொண்டா்களின் பெயா்கள் நீக்கம் போன்றவற்றால் பாஜக வெற்றி பெற்றது. இது ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளியாகும்’ என்றாா்.

403 உறுப்பினா்களைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவையில், சமாஜவாதி கூட்டணி 125 இடங்களில் வெற்றிப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com