
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் தலைமை காவலர் ஒருவர் 6 வயது ஏழைச் சிறுவனைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாதியாவில் வசிக்கும் சஞ்சீவ் சென் என்பவர், தனது மகன் மயங்க்(6) என்பவரை அடையாள தெரியாத சிலர் கடந்த மே 5-ம் தேதி ஏமாற்றி அழைத்துச் சென்றதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறையில் வழக்குப் பதிவு செய்த நிலையில், ஜான்சி சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குவாலியரில் உள்ள விவேகானந்த் சௌராஹா பகுதியில் சிறுவன் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
பின்னர், அந்த உடல் மயங்கின் உடல் என அடையாளம் காணப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
சிறுவன் காணாமல் போன பகுதியின் சிசிடிவி காட்சிகளில், சந்தேகத்திற்கிடமான செயலில் ஈடுபட்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பார்த்த நிலையில், அவர் சர்மா என அடையாளம் காணப்பட்டார்.
விசாரணையின்போது, 'கௌரவ் திவாஸ்' கொண்டாட்டத்தின் போது களப்பணிக்காக தாதியாவுக்கு சென்றதாக சர்மா காவல்துறையிடம் தெரிவித்தார்.
தாதியாவின் பஞ்சசீல் நகரில் பணியில் இருந்தபோது, சிறுவன் பலமுறை அவரிடம் வந்து பணம் கேட்டுள்ளான். இதனால், எரிச்சல் அடைந்த காவலர், சிறுவனை தனது காருக்கு அருகில் அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர், மயங்கின் உடலை தனது காரின் பின்னால் வைத்து, தாதியாவிலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள குவாலியருக்குச் சென்று, யாருமில்லாத இடத்தில் உடலை வீசியுள்ளார்.
கடந்த பல மாதங்களாக தலைமை காவலர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், சிறுவன் தொடர்ந்து பணம் கேட்டதால் எரிச்சல் அடைந்ததாகவும் ரவி ஷர்மா காவல்துறையிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமை காவலர் கைது செய்யப்பட்டார். அவரது காரை பறிமுதல் செய்து மற்ற ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் அமன் சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.