/

உ..பி.யில் விரைவில் முதல் பழங்குடியினர் அருங்காட்சியகம்

மாநிலத்தின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் முதல் பழங்குடியின அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. 

News image
Updated On :11 மே 2022, 12:41 pm

DIN

மாநிலத்தின் சுற்றுலாத் திறனை அதிகரிக்கும் வகையில், உத்தரப் பிரதேசத்தில் முதல் பழங்குடியின அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. 

பல்ராம்பூர் மாவட்டத்தில், இமிலியா கோடர் கிராமத்தில் தாரு ஜன்ஜாதி அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் தாரு பழங்குடியினரின் துடிப்பான, மாறுபட்ட கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டுள்ளது. 

5.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் கிட்டத்தட்ட நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பல்ராம்பூரில் உள்ள பழங்குடியினர் அருங்காட்சியகம் போன்று, லக்னௌ, சோன்பத்ரா மற்றும் லக்கிம்பூர் கெரி ஆகிய இடங்களிலும் பழங்குடியினர் அருங்காட்சியகங்களை நிறுவுவதற்கான செயல் திட்டத்தையும் மாநில அரசு வகுத்துள்ளது. மேலும், கன்னோஜ் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. 

அரசு செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி, 

லக்னௌவில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் சுதந்திரத்தின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கேலரி - 'ஆசாதி கி கௌரவ்காதா'  ஒன்றை உருவாக்க கலாசாரத் துறை முன்மொழிந்துள்ளது. இதனுடன், மீரட் மற்றும் கோரக்பூரில் இயற்கை அறிவியல் அருங்காட்சியகம் ஒன்றும், வாராணசியில் சாண்ட் ரவிதாஸ் அருங்காட்சியகம் நிறுவப்படும்.

உத்தரப் பிரதேசத்தின் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும்  மாநில அரசு சங்கீத நாடக அகாதமியில் 'ஜெய் கோஷ்' என்ற சமூக வானொலியையும் தொடங்க உள்ளது. 

அமிர்த மஹோத்சவ் விழாவில் மாநிலத்தின் பல மாவட்டங்களின் வளமான வரலாற்றை சித்தரிக்கும் 75 புத்தகங்களை கலாசாரத் துறை வெளியிடும். மேலும், தேசபக்தியை அடிப்படையாகக் கொண்ட 75 குறும்படங்களையும் இத்துறை தயாரித்து திரையிடும்.

தியாகிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் முயற்சிகளைப் போற்றும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆண்கள்/பெண்கள் பள்ளிகளில் அவர்களின் சிலைகள் மற்றும் பெருமைப் பலகைகளை இத்துறை நிறுவ உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.