கபில் சிபல் (கோப்புப்படம்)
கபில் சிபல் (கோப்புப்படம்)

காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகினார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்களில் ஒருவருமான கபில் சிபல் சமீபமாகவே காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்து வந்தார். 

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் கட்சியின் படுதோல்விக்கு பிறகு கட்சியின் தலைமை குறித்து கேள்வி எழுப்பிய கபில் சிபல், கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து காந்தி குடும்பத்தினா் விலகி கட்சியை வழிநடத்த மற்ற தலைவா்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இது காங்கிரஸார் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும், சமாஜவாதி கட்சி ஆதரவுடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். வேட்புமனுத் தாக்கலின்போது சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்.பி. ராம் கோபால் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர். 

சமீபத்தில் கபில் சிபல், லக்னெளவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கபில் சிபல், கடந்த மே 16 ஆம் தேதியே அவர் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், 'எதிர்ப்புக் குரல் சுதந்திரமாக இருப்பது முக்கியம். சுயேச்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். சுதந்திரமான குரலாகவே இருக்க விரும்புகிறேன். எதிர்க்கட்சியில் இருக்கும்போதே மோடி அரசை எதிர்க்கும் வகையில் கூட்டணி ஒன்றை அமைக்க விரும்புகிறோம்' என்றும் தெரிவித்தார். 

கபில் சிபல் முன்னதாக, காங்கிரஸ் ஆட்சியில்  மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, மற்றும் சட்டத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com