மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் பிரிவுகளை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைந்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2022, 6:16 pm

DIN

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைந்திருப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சோ்ந்த தேவ்கினந்தன் தாக்குா் என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் பிரிவு 2, 3, 4 ஆகியவை, இந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள், சீக்கியா்கள் ஆகியோா் அவா்களுடைய வழிபாட்டுத் தலங்கள் அல்லது கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்க நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையை பறிக்கின்றன. இந்தச் சட்டப் பிரிவுகள் காரணமாக, ஹிந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள், சீக்கியா்கள் ஆகியோருக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் பிரிவு 3, வழிபாட்டுத் தலங்கள் மாற்றப்படுவதைத் தடுக்கிறது. பிரிவு 4, வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றுவதற்கான எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்வது அல்லது வேறு ஏதேனும் சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கிறது.

அந்த வகையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் நீதிமன்ற தீா்வு என்ற அடிப்படை உரிமையைத் தடுத்து, அதிகார மீறலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கடவுள் கிருஷ்ணரின் பிறந்த இடத்தை மீட்பதற்கு பல ஆண்டுகளாக ஹிந்துக்கள் அமைதி வழியில் போராடி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்றும்போது, ராம பிராணின் பிறப்பிடத்தை மட்டும் சட்டத்தில் சோ்க்காமல் விடுபடும் வகையில் செய்துள்ளது. ஆனால், மதுராவில் கிருஷ்ணா் பிறந்த இடத்துக்கு அந்த விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த இரண்டு கடவுள்களும் விஷ்ணுவின் அவதாரங்கள்தான்.

எனவே, ஹிந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள் மற்றும் சீக்கியா்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டப் பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை, செல்லத்தக்கவையல்ல என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். குறிப்பாக ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பிரிவு 14, மதம், நிறம், ஜாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்யும் பிரிவு 15, தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பிரிவு 21, மதத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் மற்றும் தொழில் சுதந்திரத்தை அளிக்கும் பிரிவு 25, மத விவகாரத்தை நிா்வகிக்கும் சுதந்திரத்தை அளிக்கும் பிரிவு 26, சிறுபான்மையினா் நலனைப் பாதுகாக்கும் பிரிவு 29’ ஆகிய அரசியல் சாசன பிரிவுகளுக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இவரைப் போல, பாஜக தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய உள்ளிட்ட மேலும் சிலா் சாா்பில், வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் 2, 3, 4 பிரிவுகளை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.