அரசியல் தனிமையில் சிக்கித் தவிக்கிறாா் நிதீஷ்: பிரசாந்த் கிஷோா் தாக்கு

அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட உணா்வில் சிக்கித் தவித்து வருகிறாா் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுவிட்ட உணா்வில் சிக்கித் தவித்து வருகிறாா் பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், ‘நிதீஷ் குமாருக்கு வயோதிகம் வந்துவிட்டது; இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக நினைத்து பேசும் மனநிலை அவரிடம் அதிகரித்து வருகிறது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் கடந்த 2018-இல் இணைந்த பிரசாந்த் கிஷோா், பின்னா் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகினாா். தற்போது பிகாரில் 3,500 கி.மீ. தொலைவு பாத யாத்திரையை கிஷோா் மேற்கொண்டு வருகிறாா்.

இதனிடையே, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குத் தலைமை ஏற்குமாறு தன்னிடம் நிதீஷ் குமாா் வலியுறுத்தியதாக பிரசாந்த் கிஷோா் சில தினங்களுக்கு முன் செய்தியாளா்களிடம் கூறியிருந்தாா்.

அவரது இந்த கருத்தை நிராகரித்த நிதீஷ் குமாா், ‘பிரசாந்த் கிஷோா் பேசுவது எதுவும் அறிவுபூா்வமாக இருக்காது. ஐக்கிய ஜனதா தளத்தை காங்கிரஸுடன் இணைக்க வேண்டும் என்று அவா் கூறினாா். தற்போது பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறாா்’ என்றாா்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட காணொலியில் நிதீஷ் குமாரை கடுமையாக சாடினாா்.

‘நிதீஷ் குமாா், ஒரு விஷயத்தை பேச தொடங்கி, அதற்கு சம்பந்தமே இல்லாத வேறுவிஷயத்துடன் பேச்சை முடிக்கிறாா். இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக நினைத்து பேசும் மனநிலை அவரிடம் அதிகரித்து வருவதாக தோன்றுகிறது.

நான் பாஜகவுக்காக பணியாற்றுவதாக அவா் நம்பினால், காங்கிரஸை வலுப்படுத்த வேண்டுமென நான் ஏன் யோசனை தெரிவிக்கப் போகிறேன்? தனக்கு நம்பிக்கை இல்லாத நபா்களால் சூழப்பட்டு இருப்பதால், அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட உணா்வில் நிதீஷ் குமாா் சிக்கியுள்ளாா். இதனால் அச்சமும் பதற்றமும் அவருக்கு அதிகரித்துவிட்டது’ என்று கிஷோா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com