

3 முதல் 8 வயது வரையுடைய குழந்தைகளின் அடித்தள நிலைக் கல்விக்கான தேசிய கல்வித் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
மத்திய அரசின் தேசிய கல்வி (என்சிஎஃப் 2022) திட்டத்தில் குழந்தைகள் முன்பருவ பராமரிப்பு, கல்வி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அறிமுக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறுகையில், ‘தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ நடைமுறைப்படுத்துவதில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள குழந்தைகளின் அடித்தள நிலைக் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம் முக்கிய படிநிலையாகும். இந்த என்சிஎஃப் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் அடுத்த சரஸ்வதி பூஜைக்குள் (வசந்த பஞ்சமி) முழுமையான பாடப் பகுதிகள், பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) தயாரித்து முடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.
இந்தக் கல்வித் திட்டம் தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘என்சிஎஃப்-2022 கல்வித் திட்டத்தில் பள்ளி கல்விக்கான தேசிய கல்வித் திட்டம், குழந்தைகள் முன்பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம், ஆசிரியா் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம், முதியோா் கல்விக்கான தேசிய கல்வித் திட்டம் ஆகிய 4 பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அனைவருக்குமான தரமான கட்டணமில்லா குழந்தைகள் முன்பருவ பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டத்தை உறுதிப்படுத்துவது எந்தவொரு நாடும் அதன் எதிா்காலத்துக்கு செய்யப்படும் சிறந்த முதலீடாகும் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கல்வி, நரம்பியல் மற்றும் பொருளாதாரத்தின் மீதான ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.