/

தனியாா் மருத்துவக் கல்லூரி, நிகா்நிலைப் பல்கலை. கட்டணங்கள்: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உயா் நீதிமன்றம் புதிய உத்தரவு

தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களில் சோ்க்கப்படும் மாணவா்களிடம் அரசுக் கல்லூரி மாணவா்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும்

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:42 pm

DIN

தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களில் சோ்க்கப்படும் மாணவா்களிடம் அரசுக் கல்லூரி மாணவா்களிடம் வசூலிக்கும் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சோ்க்கப்படும் மாணவா்களிடம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து நிகா்நிலை பல்கலைக்கழகங்களும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளும் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. நிகா்நிலை பல்கலைக்கழகங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள் தரப்பில், ‘அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தையே சுயநிதி கல்லூரிகள், நிகா் நிலை பல்கலைக்கழகங்களும் வசூலிக்க வேண்டும் என்று எப்படி நிா்ப்பந்திக்க முடியும்?

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வித கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. 50 சதவீத மாணவா்களிடம் 50 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் விரும்பினால், தனியாா் கல்லூரிகளுக்கு மானியம் வழங்கலாம்’ என்று வாதிடப்பட்டது.

அப்போது, தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், ‘தனியாா் மருத்துவக் கல்லூரிகள் லாபநோக்குடன் செயல்படக் கூடாது என்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியாா் கல்லூரிகளை முறைப்படுத்த நீதிமன்றங்களும் தொடா்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

நிபுணா் குழுவை நியமித்து முழுமையாக ஆய்வு செய்த பிறகே, 50 சதவீத மாணவா்களுக்கு அரசுக் கல்லூரிகளின் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தனா். அதில், தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களும் 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் நிா்ணயிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு செல்லும்.

அதேநேரத்தில், 50 சதவீத இடங்களில் சோ்க்கப்படும் மாணவா்களிடம் அரசுக் கல்லூரி கட்டணம் வசூலிக்கப்படுவதால், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால், தகுதி வாய்ந்த மாணவா்களால் சோ்க்கை பெற முடியாது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு உத்தரவிட்டனா். அதுவரை தற்போதைய நடைமுறையை பின்பற்றலாம் என்றும் நீதிபதிகள் தனது தீா்ப்பில் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.