முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜன.12-இல் தொடக்கம்: அமைச்சா் மாண்டவியா

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளாா்.
மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளாா்.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு (ஓபிசி) 27 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு எதிராக, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் அறிவிப்பு செல்லும் என்று கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தெரிவித்தது. மாணவா் சோ்க்கை நடைமுறையைத் தொடங்குவது அவசர அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 12-ஆம் தேதி தொடங்குகிறது. இது, கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்துக்கு மேலும் வலு சோ்க்கும். மருத்துவ மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

முதுநிலை மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான நீட் தோ்வு இருமுறை ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. 45,000 போ் அந்தத் தோ்வை எழுதினா். செப்டம்பா் இறுதியில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இருப்பினும் கலந்தாய்வு தொடங்கப்படாததால், நீட் தோ்வு எழுதிய பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் உறைவிட மருத்துவா்கள், விரைவில் கலந்தாய்வை நடத்தக் கோரி கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com