அபுதாபியில் கொல்லப்பட்ட இந்தியர்களின் துயரக் கதைகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியா்கள் இருவர் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 
ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உறவினர்கள்.
ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உறவினர்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியா்கள் இருவர் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 

ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபி சா்வதேச விமான நிலையத்துக்கு அருகேயுள்ள அரசின் எண்ணெய்க் கிடங்கு மீது கடந்த திங்கள்கிழமை (ஜன.17) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எண்ணெய்க் கிடங்கில் இருந்த மூன்று எண்ணெய் டேங்கா்கள் வெடித்துச் சிதறின.

இந்த சம்பவத்தில் இந்தியா்கள் இருவா், பாகிஸ்தானியா் ஒருவா் ஆகிய மூவா் உயிரிழந்தனா். யேமனில் செயல்பட்டு வரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றனா்.

ஹர்தீப் சிங் | ஹர்தேவ் சிங்
ஹர்தீப் சிங் | ஹர்தேவ் சிங்

இந்த சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததுடன் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியா்கள் இருவரின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. 

ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் இருவரும், பஞ்சாபின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்தேவ் சிங்(35) மற்றும் அமிர்தசரஸின் மஹிசாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஹர்தீப் சிங்(28) என்பது தெரியவந்துள்ளது. இருவரது உடல்களும் வெள்ளிக்கிழமை(ஜன.21) அம்ரிஸ்தரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து அவரவர் ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

அம்ரிஸ்தரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்தியரின் உடல்கள்
அம்ரிஸ்தரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்தியரின் உடல்கள்

ஹர்தேவ் சிங்கின் மூத்த சகோதரர் சுக்தேவ் சிங், 'தம்பி ஹர்தேவ் சிங் கடந்த 16 ஆண்டுகளாக வெளிநாட்டில்தான் இருந்தார். 18 வயதில் வெளிநாட்டுக்குச் சென்றார். பாதுகாப்பு கருதி ஒவ்வொரு வேலையாக மாறிக்கொண்டு இருந்தார். இறுதியாக எண்ணெய் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. வாழ்க்கைச் சூழல் மாறிய நம்பிக்கையுடன் இருந்தார். மத்திய கிழக்கு பகுதியில் போர்ச் சூழல் இருந்தால் அவரை அபுதாபி அனுப்புவது சற்று பயமாகவே இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக அமைதி நிலவியதால் அவர் அபுதாபி செல்ல என் பெற்றோர் சம்மதித்தனர். எனக்கும் அங்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்தார். அங்கு எனக்கு முழுவதும் ஆதரவாக இருந்தவர். அவரின்றி எவ்வாறு இனி அங்கு இருப்பேன் என்று தெரியவில்லை' என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

மேலும், 'ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகத்தான் அவருக்குத் திருமணம் நடந்தது. அவர்களுடைய மகனுக்கு இப்போது 4 வயது. அவரது மனைவி எங்களுடன் வசிக்கவில்லை. ஹர்தேவின் இறுதிச்சடங்குக்கு மட்டும் வந்து கலந்துகொண்டு சடங்கு முடிந்தவுடன் சென்றுவிட்டார். ஹர்தேவின் உடலை வீட்டுக்கு கொண்டுவருவதற்கு அதிகாரிகள் மிகவும் உதவியாக இருந்தார்கள்' என்றார். 

ஹர்தேவுக்கு தாய், தந்தை, சகோதரர் சுக்தேவ், மனைவி அம்ரித்பால் கௌர் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். 

ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உறவினர்கள்.
ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உறவினர்கள்.

அதுபோல ஹர்தீப் சிங்கின் உறவினர் ராஜ்பீர் சிங் கூறுகையில், 'ஹர்தீப் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம்தான் கணுப்பிரியா கௌர் என்பவருடன் திருமணம் நடந்தது. அபுதாபியில் எண்ணெய் டேங்கர் லாரியை ஓட்டும் பணியில் இருந்தார். எங்களுடைய உறவினர்கள் பலரும் அங்கு இருக்கிறார்கள். ஹர்தீப் சிங் இறந்துவிட்ட செய்தி, அவர்கள் மூலமாகத் தான் எங்களுக்கு தெரிந்தது. பின்னர் தூதரகத்தில் இருந்து போன் மூலமாகவும் தகவல் வந்தது. 

ஹர்தீப்பின் மனைவி கணுப்பிரியா, கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்தார். ஹர்தீப் கடந்த புதன்கிழமை இந்தியாவுக்கு வந்து பின்னர் மனைவியுடன் கனடா செல்வதாக இருந்தது. அம்மா மற்றும் மனைவியுடன் கனடா செல்வதுதான் ஹர்தீப்புக்கு கனவாக இருந்தது. அதன்படியே விரைவில் அவர்கள் கனடா செல்லத் திட்டமிருந்த நிலையில்தான் இப்படியாகி விட்டது' என்று தெரிவித்தார். 

தாக்குதல் நடந்ததற்கு ஒருநாள் முன்னதாக ஹர்தீப் தங்களுடன் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஹர்தீப்பின் தந்தை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னதாகத் தான் இறந்துள்ளார். ஹர்தீப்புக்கு தாய் சரண்ஜித் கௌர்(56), மனைவி கணுப்பிரியா மற்றும் மூத்த சகோதரர் இருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com