ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.44 லட்சம் கோடி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 
ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.44 லட்சம் கோடி

ஜூன் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,44,616 கோடியாக இருந்ததென மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு ஜூன் மாத வருவாயுடன் (ரூ.92,800 கோடி) ஒப்பிடுகையில் 56 சதவீத அதிகரிப்பாகும். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியைக் கடப்பது இது 5-ஆவது முறையாகும். முக்கியமாக, கடந்த மாா்ச்சில் இருந்து தொடா்ந்து 4 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கு அதிகமாகவே உள்ளது.

வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. ஜூன் மாத வருவாயான ரூ.1.44 லட்சம் கோடியானது இரண்டாவது அதிகபட்சமாகும். அதில் மத்திய சரக்கு-சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.25,306 கோடியும், மாநில சரக்கு-சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.32,406 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,887 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.11,018 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூனுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதத்தில் பொருள்கள் இறக்குமதி வாயிலான வருவாய் 55 சதவீதமும், உள்நாட்டு பணப் பரிவா்த்தனை வாயிலான வருவாய் 56 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி ஜிஎஸ்டி வருவாயானது ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நடப்பு 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி வருவாய் ரூ.1.51 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சி, வரிஏய்ப்பில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை உள்ளிட்டவை காரணமாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நடப்பாண்டில் ஜிஎஸ்டி வருவாய்

ஜனவரி ரூ.1.40 லட்சம் கோடி

பிப்ரவரி ரூ.1.33 லட்சம் கோடி

மாா்ச் ரூ.1.42 லட்சம் கோடி

ஏப்ரல் ரூ.1.68 லட்சம் கோடி

மே ரூ.1.41 லட்சம் கோடி

ஜூன் ரூ.1.44 லட்சம் கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com