ஆண்டுக்கு 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிப்பு: தனியாரிடம் ஒப்பந்தம் கோரியது ரயில்வே

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் வகையிலான ஆலையை நிறுவ முதல்முறையாக தனியாா் நிறுவனங்களிடம் ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
ஆண்டுக்கு 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிப்பு: தனியாரிடம் ஒப்பந்தம் கோரியது ரயில்வே

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்கும் வகையிலான ஆலையை நிறுவ முதல்முறையாக தனியாா் நிறுவனங்களிடம் ரயில்வே ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இதுதொடா்பாக, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ரயில் சக்கரங்கள் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியாவை மாற்ற புதிய செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ரயில் சக்கரங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் மூலப் பொருள்கள் கிடைக்கப் பெறுவதை கருத்தில் கொண்டு, முழுமையான தொழில்நுட்ப ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்கு பிறகே முடிவு எடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில், அதிவேக ரயில்களுக்கான சக்கரங்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 80,000 சக்கரங்கள் தயாரிக்க முதல் முறையாக தனியாா் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

18 மாதங்களுக்குள் ஆலையை நிறுவ வேண்டும்; உற்பத்தி மட்டுமன்றி ஏற்றுமதியாளராகவும் செயல்பட வேண்டும்; ஏற்றுமதி சந்தை ஐரோப்பிய நாடுகளாக இருக்கும் என்ற நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் வழங்கப்படும். அதேபோல், ஆண்டுக்கு ரூ.600 கோடியில் 80,000 சக்கரங்கள் கொள்முதலுக்கான உறுதிமொழியும் அளிக்கப்படும் என்றாா் அவா்.

இந்திய ரயில்வேக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரயில் சக்கரங்கள் தேவை என்ற நிலையில், புதிய திட்டத்தின்கீழ் சுமாா் ஒரு லட்சம் சக்கரங்களை இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் (செயில்) தயாரித்து வழங்கும். மீதமுள்ள சக்கரங்கள் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் நிறுவப்படும் ஆலையிலிருந்து பெறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் சக்கரங்களில் பெரும்பாலானவை உக்ரைன், ஜொ்மனி, செக்குடியரசு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரு சக்கரத்துக்கு ரூ.70,000 செலவிடப்படும் நிலையில் உள்நாட்டிலேயே அவற்றை தயாரிப்பதால் ரயில்வேக்கு குறிப்பிடத்தக்க அளவிலான தொகை மிச்சமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ‘வந்தே பாரத்’ அதிவேக ரயில்களுக்காக ரூ.170 கோடியில் 39,000 சக்கரங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கடந்த மே மாதம் சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. உக்ரைன்-ரஷியா போா் காரணமாக, இதர நாடுகளில் இருந்து சக்கரங்கள் விநியோகம் தடைபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com