கெலாட் vs பைலட்: ராஜஸ்தானில் என்ன நடக்கிறது? காங்கிரஸுக்குப் பின்னடைவு?

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அரசியல் குழப்பமும் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அசோக் கெலாட் | ராகுல் காந்தி | சச்சின் பைலட்
அசோக் கெலாட் | ராகுல் காந்தி | சச்சின் பைலட்

காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தவே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய அரசியல் குழப்பமும் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட்டுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவியில் போட்டியிடுவதே இந்த அரசியல் குழப்பத்திற்குக் காரணம். 

காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். தாங்கள் தலைவராகப் போவதில்லை என சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றனர். 

இதனால் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு அசோக் கெலாட், சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அசோக் கெலாட் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க, சசி தரூர் தரப்பினர் வேட்புமனு படிவத்தைப் பெற்றுள்ளனர். திக்விஜய் சிங், மணீஷ் திவாரி உள்ளிட்ட சிலரும் போட்டியிடலாம் என்று கருதப்படுகிறது. 

கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. செப். 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். எனவே, தற்போதைய காங்கிரஸ் கட்சியை மேம்படுத்தவும் கட்சி விதிகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தவும் இந்த தேர்தல் உதவும் என்று நம்பப்படுகிறது. 2024ல் நாடாளுமன்றத் தேர்தலும் வரவுள்ளதால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் இந்திய அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 

ஆனால், இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் இரண்டே மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் (மற்றொன்று சத்தீஸ்கர்) கெலாட் ஆட்சிக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில், அங்கு முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

கடந்த 2020ல் அசோக் கெலாட்டுக்கு எதிராக தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கிய நிலையில், பின்னர் அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு நிலைமை ஓரளவு சரிசெய்யப்பட்டது. 

தற்போது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடுவதால் கட்சியின் விதியான 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று தெரிகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக கட்சியில் பல்வேறு அரசியல் சாசன பதவிகளை வகித்துவிட்டதாகவும் இப்போது இளைய தலைமுறையினா் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றும் நேற்று (ஞாயிறுக்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் இதனை சூசகமாக தெரிவித்தார் கெலாட். 

இதனால் மாநில முதல்வராக சச்சின் பைலட் தீவிரம் காட்டி வருகிறார். அவரை முதல்வராக்க ராகுல் காந்தியும் விரும்புவதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராஜஸ்தானின் அடுத்த முதல்வராக சச்சின் பைலட் விரைவில் பொறுப்பேற்பாா் என அந்த மாநில அமைச்சா் ராஜேந்திர கெளடா கூறியுள்ளார். 

ஆனால், கெலாட் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கு அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில முதல்வர் ஆகிய இரு பதவிகளையும் அவரால் நிர்வகிக்க முடியும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ கோவிந்த் ராம் மேக்வால் கூறுகிறார். 

இன்னொரு பக்கம், கெலாட்டே முதல்வா் பதவியில் தொடர வேண்டும் அல்லது ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக்க வேண்டும் அல்லது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட் போட்டியிடுவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கெலாட் ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அவைத் தலைவரிடம் ராஜிநாமா கடிதம் வழங்கியதாக கட்சி எம்எல்ஏ ஒருவர் கூறியுள்ளார். இதுவே ராஜஸ்தானில் மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து, கட்சித் தலைமை முடிவு செய்யட்டும் என்று பைலட் கூற, தன் கையில் எதுவுமில்லை என்று கெலாட் பதில் அளிக்கிறார். 

ராஜஸ்தானில் அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பொதுச் செயலாளர் அஜய் மேகனும் கெலாட், சச்சின் பைலட் ஆகியோரிடம் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். கட்சித் தலைமையும் இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்குக் கூட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒத்துழைக்க மறுப்பதாக அஜய் மேகன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், கெலாட்டின் ஆலோசனையின்றி அவரது எம்எல்ஏக்கள் இவ்வாறு செயல்பட மாட்டார்கள் என்றும் கெலாட் தான் தனது எம்எல்ஏக்களை தூண்டிவிட்டுள்ளதாகவும் ஒரு தரப்பு கூறுகிறது. 

ஏனெனில், ஆரம்பம் முதலே ராஜஸ்தான் முதல்வர் பதவியை விட்டு விலக கெலாட் மறுத்துவந்தார். 

தற்போது ராஜஸ்தான் அரசியல் சூழ்நிலையை சரிசெய்ய, காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து கெலாட் விலக வாய்ப்புள்ளது அல்லது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் பட்சத்தில் இரு பதவிகளையும் வகிக்கவும் வாய்ப்புள்ளது. 

நாட்டில் வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் நிலையில் , ஒரு மாநிலத்தில் கட்சித் தலைவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லாதது கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதிலும் கட்சியின் மூத்த தலைவரான கெலாட்டே பொறுப்பின்றி செயல்படுவதாகவும் மாநிலத்தில் உள்ள பிரச்னையையே சமாளிக்க முடியாத அவர், தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றால் எப்படி கட்சியை வழிநடத்துவார் என்றும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

'காங்கிரஸ் கட்சித் தலைமை' குறித்தே பல்வேறு வகைகளில் விமர்சித்து வரும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்த அரசியல் குழப்பம் மேலும் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது கட்சியினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஒற்றுமை நடைப் பயணத்தின் மூலமாக மக்களை சந்தித்து வருகிறார் ராகுல் காந்தி. இந்த சூழ்நிலையில் கட்சித் தலைமை சரியான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சித் தலைமை விரைந்து இதில் தலையிட்டு முடிவெடுத்தால் மட்டுமே கட்சிக்கும் மாநில ஆட்சிக்கும் நல்லது என காங்கிரஸாரர் கோரிக்கையாக முன்வைக்கின்றனர். 

சோனியா காந்தி என்ன முடிவெடுப்பார்? பார்க்கலாம்.... 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com