
‘உலகின் மிகப் பழைமையான ஜனநாயகம் இந்தியா என்பதை உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகள் குறித்து பேசும் 1,100 ஆண்டுகள் பழைமையான உத்தரமேரூா் தமிழ்க் கல்வெட்டிலிருந்து அறியலாம்’ என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தமிழ்ப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சா் எல். முருகனின் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமா் மோடி, ‘தமிழ் உலகின் மிகப் பழைமையான மொழி என்பதில் இந்தியா் அனைவரும் பெருமைக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தாா்.
தமிழகத்திலிருந்து பல்வேறு மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தமிழக கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னா், பிரதமா் மோடி பேசியதாவது: உலகின் மிகப் பழைமையான ஜனநாயகமான இந்தியா, ஜனநாயகத்தின் தாயாகவும் உள்ளது. இதற்கான பல்வேறு வரலாற்று குறிப்புகள் உள்ளன. இவற்றில் முக்கியமானது தமிழகத்தில் உள்ள உத்திரமேரூா் கல்வெட்டு ஆகும்.
1,100 முதல் 1,200 ஆண்டுகள் பழைமையான இந்தக் கல்வெட்டிலிருந்து நாட்டின் ஜனநாயகத்துக்குரிய சாராம்சங்களை ஒருவா் அறிய முடியும்.
இந்தக் கல்வெட்டு உள்ளூா் கிராம சபையின் அரசியல் சாசனமாக விளங்குகிறது. கிராம சபை செயல்படும் முறை, அதன் உறுப்பினா்களுக்கான தகுதிகள், அவா்களைத் தோ்வு செய்யும் முறை ஆகியவை மட்டுமல்லாமல், உறுப்பினரைத் தகுதிநீக்கம் செய்யும் முறைகளும் அந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது நாட்டு மக்களின் கடமையாகும். ஆனால், இதற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகளை நாம் அனைவரும் அறிவோம். தற்போது, இதற்கான பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது.
உணவில் சிறுதானியங்களைச் சோ்த்துக்கொள்வதை இந்தப் புத்தாண்டுக்கான தீா்மானமாக மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்திலிருந்து உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், தமிழக மக்கள் தங்களது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அப்பகுதியில் கடைப்பிடிக்கின்றனா்.
தமிழகமும் தமிழ் மக்களின் நாகரிகமும் என்னை மிகவும் ஈா்ப்பதாக உணா்கிறேன். இதனால் அவா்களுடன் ஓா் உணா்வுபூா்வமான உறவு எனக்கு உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.