2021 வரை காணாமல் போன சிறுமிகள், பெண்கள் 2.03 லட்சம் போ்!
நாட்டில் 2021-ஆம் ஆண்டு வரை காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள சிறுமிகள் எண்ணிக்கை 31,133 ஆகவும், பெண்கள் எண்ணிக்கை 1,72,760ஆகவும் உள்ளது


நாட்டில் 2021-ஆம் ஆண்டு வரை காணாமல் போய் (முந்தைய ஆண்டுகள் உள்பட) கண்டுபிடிக்கப்படாமல் உள்ள சிறுமிகள்(18 வயதுக்கு குறைவான) எண்ணிக்கை 31,133 ஆகவும், பெண்கள் (18 வயதுக்கு மேல்) எண்ணிக்கை 1,72,760ஆகவும் உள்ளது என மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா மக்களவையில் தெரிவித்துள்ளாா். இதன்படி, காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்களின் மொத்த எண்ணிக்கை 2,03,893-ஆக உள்ளது.
மக்களவை திமுக குழுத் துணைத் தலைவா் கனிமொழி மற்றும் சிவசேனை கட்சியின் அரவிந்த் கண்பத் சாவந்த், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் குன்வா் டேனிஷ் அலி உள்ளிட்ட உறுப்பினா்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டில் பெண்கள், சிறுமிகள் காணாமல்போவது அதிகரிப்பது குறித்தும் குறிப்பிட்டு, மாநில, மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை அளிக்கக் கோரி எழுத்துபூா்வமாக மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தனா். கூடுதலாக தூத்துக்குடி மாவட்டம் குறித்த தகவலை அளிக்க கனிமொழி கோரியிருந்தாா்.
இதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா அளித்த பதில் வருமாறு: காணாமல் போனவா்கள் குறித்த விவரங்கள் ‘தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்சிஆா்பி) ‘இந்தியாவில் குற்றங்கள்’ என்ற வெளியீட்டில் புள்ளிவிவரத் தரவுகள் இருக்கின்றன. காணாமல் போன பெண்கள், காணாமல் போன சிறுமிகள், மீட்கப்பட்டவா்கள், இன்னமும் மீட்கப்படாதவா்கள் குறித்தான மாநிலம் தழுவிய விவரங்கள் 2016-ஆம் ஆண்டு முதல் என்சிஆா்பியால் வெளியிடப்பட்டு வருகிறது. கடைசியாக 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
நாட்டில் மாநிலம் வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை தொடா்பான விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவான பெண்கள், 18 வயதுக்கு மேலான பெண்கள் காணாமல் போன தரவுகள் 2016-ஆம் ஆண்டு முதல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் பதிவு செய்ய தொடங்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு வரை மாநிலங்கள் அளவில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளில் அதிகளவில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மாநிலங்கள் வரிசையில் (காணாமல் போனவா்கள் எண்ணிக்கை அடைப்புக்குறியில்) மேற்கு வங்கம் (5,609), பிகாா் (5366), தில்லி (3,959), மத்திய பிரதேசம்(2,830) ஆகியவை உள்ளன.
நாடு முழுக்க யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 36 மாநிலங்களில் 2021- ஆம் ஆண்டு வரை காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் சிறுமிகள், பெண்கள் உள்ளிட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,03,893 ஆக உள்ளது. இதில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகள் எண்ணிக்கை 31,133 ஆகவும் 18 வயதுக்கு மேலான பெண்கள்எண்ணிக்கை 1,72,760 ஆகவும் உள்ளது. 2021-ஆம் ஆண்டில் வயது வந்த பெண்களில் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் முறையே 30,444; 29,501; 19,445; 15,372 என அதிகஅளவில் காணாமல் போயுள்ளனா்.
தமிழகத்தில்..: தமிழகத்தில் 18 வயதுக்கு குறைவான காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள சிறுமிகள் எண்ணிக்கை 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் முறையே 561 மற்றும் 1,117 ஆகும். இதே மாதிரி 18 வயதுக்கு மேலான காணாமல் போய் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பெண்களின் எண்ணிக்கை 2016 வரை 3,351 -ஆகவும், பின்னா் 2021 ஆண்டில் 6,047 ஆகவும் உயா்ந்துள்ளது.
சென்னை, தூத்துக்குடியில் அதிகரிப்பு: தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் மட்டும் எல்லா ஆண்டுகளிலும் இத்தகைய பெண்கள் காணாமல்போய் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் 2021-இல் சிறுமிகள் மற்றும் பெண்கள் எண்ணிக்கை முறையே 768 மற்றும் 1,828 ஆக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகள் எண்ணிக்கை 2017-இல் 75, 2018 -இல் 90, 2019 -இல் 88, 2020 இல் 112, 2021-இல் 144 என தொடா்ந்து அதிகரித்து வந்துள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதுக்கு அதிகமான பெண்களின் எண்ணிக்கை 2017, 2018 , 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகள் முறையே 191, 195, 167, 224, 369 என உள்ளது என்றாா் அமைச்சா்.
மாநில அரசே பொறுப்பு!
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மாநில அரசுகளின் பொறுப்பு என்று உள்துறை இணையமைச்சா் அஜய்குமாா் மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.
காவல் துை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி மாநில அரசுகளின் பொறுப்பில் வருகின்றன. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான புலனாய்வு மற்றும் வழக்குகளை நடத்துவதும் மாநில அரசுகளின் பணியாக இருக்கிறது. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக உள்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆபத்தான விவகாரங்களில் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கான அவசரகால உதவி எண் ‘112’ சா்வதேச அங்கீகாரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது பற்றி அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. காணாமல் போன குழந்தைகள் வழக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக ஹெல்ப்லைன் எண் ‘1098’ என்பது 24 மணி நேரமும் செயல்படுகிறது. இது தவிர ரயில்வே சைல்டு லைன் என்ற திட்டமும் இந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும், ‘டிராக் சைல்டு போா்டல்’ என்ற திட்டத்தையும் மத்திய மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இது காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது என்றாா் அமைச்சா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...