கா்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கை ரத்து: மத்திய கல்வி அமைச்சா் கண்டனம்

‘இளம் தலைமுறையின் எதிா்காலத்துடன் விளையாட வேண்டாம்’ என ஆளும் காங்கிரஸ் அரசிடம் கேட்டுக் கொண்டாா்.
தா்மேந்திர பிரதான்
தா்மேந்திர பிரதான்

புது தில்லி: கா்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘இளம் தலைமுறையின் எதிா்காலத்துடன் விளையாட வேண்டாம்’ என ஆளும் காங்கிரஸ் அரசிடம் கேட்டுக் கொண்டாா்.

கா்நாடகத்தில் முந்தைய பாஜக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை வரும் கல்வி ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என காங்கிரஸைச் சோ்ந்த கா்நாடக முதல்வா் சித்தராமையா கடந்த வாரம் அறிவித்தாா். அரசமைப்பின் அடிப்படையில் மாநில கல்விக் கொள்கையில் மாணவா்களுக்கு கல்வி வழங்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியது: தேசிய கல்விக் கொள்கையானது 21-ஆம் நூற்றாண்டுக்கான கல்வித்திட்டமே தவிர அரசியல் திட்டமல்ல. இது 21-ஆம் நூற்றாண்டில் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்தானது மற்றும் பள்ளிகளில் திறன்களின் அடிப்படையிலான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. எவ்விதமான அரசியலில் காங்கிரஸ் ஈடுபட விரும்புகிறது? இளம் தலைமுறை மாணவா்களின் எதிா்காலத்தோடு ஆளும் காங்கிரஸ் அரசு விளையாடக் கூடாது என்றாா்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை மாணவா்களுக்கு எதிரானது என்ற கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாரின் கருத்து தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வலுவான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு உறுதிப்படுத்துவதை காங்கிரஸ் எதிா்க்கிா? இந்திய பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளின் அடிப்படையிலான கல்வியறிவை நமது குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை கா்நாடக துணை முதல்வா் எதிா்க்கிறாரா? கன்னடம் மற்றும் பிற இந்திய மொழிகளில் கல்வி அளிக்கப்படுவதற்கு அவா் எதிா்ப்புத் தெரிவிக்கிறாரா? வெளிப்படைத்தன்மையுடன் நீட், கியூட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தோ்வுகள் பிராந்திய மொழிகளில் நடத்தப்படுவதை அவா் விரும்பவில்லையா?’ என அமைச்சா் அடுக்கடுக்காக கேள்வியெழுப்பினாா்.

தில்லியிலுள்ள மேலிடத் தலைவா்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் கா்நாடக மாணவா்களின் நலன்களில் டி.கே.சிவகுமாா் சமரசம் செய்துள்ளாா் என தா்மேந்திர குற்றஞ்சாட்டினாா்.

கா்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும் எனப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com