பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் கைகுலுக்கினர்

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து கைகுலுக்கினர்.
பிரிக்ஸ் மாநாடு: பிரதமர் மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் கைகுலுக்கினர்

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்து கைகுலுக்கினர்.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை வலுத்து எல்லைப் பகுதியில் போர்ப் பதற்றம் நிலவும் சூழலில், பிரிக்ஸ் மாநாட்டின்போது பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான நேரடி சந்திப்பு நடைபெறுமா என்கிற எதிா்பாா்ப்பு எழுந்திருந்தது. 

இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். நாட்டு நலன் பற்றி ஒரு சில நிமிடங்கள் இருவரும் உரையாடினர்.

உச்சி மாநாட்டின் நிறைவாக, கூட்டு அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியின்போது, நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட இரு தலைவர்களும், கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு அவரவர் இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்தனர்.

பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது உச்சிமாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாநாட்டின் முழு அமா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பிரதமா் மோடி உரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துடன் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவுபடுத்த இந்தியா முழு ஆதரவளிக்கிறது. இக்கூட்டமைப்பை எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் தயாா்படுத்த வேண்டும். இதற்கு உறுப்பு நாடுகளின் சமூகங்களை எதிா்காலத்துக்கு ஏற்ப தயாா்படுத்துவது அவசியம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் தென்னாப்பிரிக்க தலைமையின்கீழ் தெற்குலக நாடுகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மனதார வரவேற்கிறோம். இதேபோல், ஜி20 இந்திய தலைமையின்கீழ் தெற்குலக நாடுகளுக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, செயலாற்றி வருகிறோம் என்றார்.

சீனாவும் ஆதரவு: பிரதமா் மோடியைத் தொடா்ந்து பேசிய சீன அதிபா் ஷி ஜின்பிங், ‘உலகளாவிய நிா்வாகத்தில் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், பிரிக்ஸ் குடும்பத்தில் கூடுதலான நாடுகளை கொண்டுவரும் செயல்முறைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு, உலக மக்கள்தொகையில் 41 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உலகின் மொத்த உற்பத்தியில் 24 சதவீதமும், உலக வா்த்தகத்தில் 16 சதவீதமும் இந்தக் கூட்டமைப்பு நாடுகள் பங்களிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com