ஒடிஸா: வருமான வரித்துறை சோதனையில் ரூ.250 கோடி ரொக்கம் பறிமுதல்..!

ஒடிஸாவில் மதுபான உற்பத்தி நிறுவனத்துக்குத் தொடா்புடைய இடங்களில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் 150க்கும் மேற்பட்ட பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.250 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

புவனேசுவரம் : மேற்கு ஒடிஸாவின் புகழ்பெற்ற மதுபான உற்பத்தி நிறுவனமான ‘பால்டியோ சாஹு’ குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் சாம்பல்பூா், போலன்கிா், திடிலாகா் பௌத், சுந்தா்கா், ரூா்கேலா மற்றும் புவனேசுவரம் ஆகிய பகுதிகளில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகள், தொழிற்சாலைகளில் வருமான வரித் துறை புதன்கிழமை முதல் சோதனை நடத்தியது.  

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டப்பட்டுள்ள நிறுவனம், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் நிலையில், ஜார்கண்டில் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. போலன்கிா் மாவட்டத்தின் சுடாபடா பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடந்த சோதனையில் 156 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.220 கோடி ரொக்கம் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டது. 

இந்த நிலையில், தொடர்ந்து நடைபெற்ற  வருமான வரித்துறை சோதனையில் இதுவரை ரூ.250 கோடிக்கும் அதிகமான தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள கணக்கில் வராத கருப்புப் பணத்தின் மதிப்பு, ரூ.290 கோடியை தாண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித் துறை உள்ளிட்ட சோதனை முகமைகளால், ஒரேகட்ட சோதனையின்போது  பறிமுதல் செய்யப்பட்டுள்ள அதிகபட்ச கருப்புப் பணம்  இதுவாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொகையை கணக்கிடும் பணியில்  40 பணம் எண்ணும் இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்காக கூடுதலாக வங்கி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை எடுத்துச்செல்ல கூடுதல் வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம்  வருமான வரித்துறை சோதனையை  வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com