உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமர் மோடி

சட்டப்பிரிவு 370 தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது: பிரதமர் மோடி

சட்டப்பிரிவு 370 தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சட்டப்பிரிவு 370 நீக்கியது செல்லும் என்று தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் கூறியுள்ளனர். 

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். 

இதுகுறித்து  பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'சட்டப்பிரிவு 370-யை ரத்து செய்வது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2019, ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றம் எடுத்த முடிவு அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் உள்ள நமது சகோதர, சகோதரிகளின் நம்பிக்கை, முன்னேற்றம், ஒற்றுமையின் உறுதியான அறிவிப்பு. இந்தியர்களாகிய நாம், எல்லாவற்றிற்கும் மேலாக வைத்திருக்கும் ஒற்றுமையின் சாரத்தை நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலமாக வலுப்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளில் உள்ள மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான எங்களின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாதது என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

முன்னேற்றத்தின் பலன்கள் உங்களை சென்றடைவது மட்டுமல்லாமல், 370-வது சட்டப்பிரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரிவினருக்கும் அதன் பலன்களை வழங்குவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இன்றைய தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகவும், வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவைக் கட்டியெழுப்புவதற்கான நமது கூட்டு உறுதிப்பாட்டின் சான்றாகவும் உள்ளது' என்று என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com