சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாள்கள் நடைபெற்றது.

வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது. இதில், 3 விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரண்டு தீர்ப்புகளிலும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது:

“குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும்போது மாநிலங்கள் யூனியன் பிரதேச அதிகாரத்தில் வந்துவிடும். மாநிலத்தின் செயல்பாட்டுக்காக குடியரசுத் தலைவர் அதிகாரத்தை பயன்படுத்துவதை மறுஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

போர் சூழலை கட்டுப்படுத்த இடைக்கால தீர்வாகத்தான் சட்டப்பிரிவு 370 உள்ளது. அவசர சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆயுளையே கொண்டது. இதன்மூலம், சட்டப்பிரிவு 370 என்பது தற்காலிகமானது தான் என்ற முடிவுக்கு வருகிறோம்.

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையை கலைத்த பிறகும், சட்டப்பிரிவு 370 குறித்த அறிவிப்பை வெளிடுவதற்கான அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவர் ரத்து செய்ய முடியும். லடாக்கை யூனியன் பிரதேசமாக பிரித்தது சரிதான்.

ஜம்மு - காஷ்மீருக்கு அடுத்தாண்டு செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இணைந்த ஜம்மு - காஷ்மீர் மாநிலம், மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்ட இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை. ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு நடைமுறையில் இருக்கும்போது, மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது. மத்திய அரசு அடுக்கும் ஒவ்வொரு முடிவும் சட்டரீதியான சவாலுக்கு உள்பட்டதாக இருக்கவும் முடியாது. அவ்வாறு இருந்தால் அது குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com