மத்திய பிரதேச மாடலை ராஜஸ்தானிலும் பின்பற்றுமா பாஜக?

மத்திய பிரதேசத்தைப் போலவே, ராஜஸ்தானிலும் முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்ற மாடலை பின்பற்றும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரதேச மாடலை ராஜஸ்தானிலும் பின்பற்றுமா பாஜக?
Published on
Updated on
2 min read


மத்திய பிரதேசத்தைப் போலவே, ராஜஸ்தானிலும் முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள் என்ற மாடலை பின்பற்றும் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானில் உள்ள மூன்று முக்கிய சமூக மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில், ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்களை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுவதாவது, ராஜ்புத், பிராமணர்கள், மீனா மற்றும் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் மூன்று பேரை இந்த பதவிகளில் அமர வைக்கலாம். பேரவைத் தலைவர் பதவிக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இது முதல்வர் பதவிக்கு யாரை நியமிப்பது என்று முதன்முதலில் பேசப்பட்டபோது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் ஒருவர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட சமூகத்தைச் சேர்ந்தர்கள், தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் உயர் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள், வலியுறுத்தவும் செய்வார்கள். எனவே, அனைவரையும் சமாதானப்படுத்த ஒரு முதல்வர், இரண்டு துணைமுதல்வர்கள் என்றால் மட்டுமே முடியும் என்கிறார்கள் தகவலறிந்தவர்கள்.  முதலில் முதல்வரை தேர்வு செய்துவிட்டு, பிறகு மற்ற சமூகத்தைச் சேர்ந்த இரு தலைவர்களை துணை முதல்வர்களாக தேர்வு செய்யும் பணி நடைபெறும்.

இதில்லாமல், முக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களே, இவர்களை முதல்வராக்குங்கள், துணை முதல்வராக்கங்கள் என்று பாஜக தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதால், பாஜக எந்த சமுதாயத்தையும் பகைத்துக்கொள்ளவோ, சற்று கீழே இறக்கிவைக்கவோ முடியாது. காங்கிரஸ் - பாஜக இடையேயான வாக்கு விகிதம் வெறும் 2.16 சதவீதம் தான் என்பதையும் கவனத்தில் வைத்து, எந்த வாய்ப்பையும் எடுத்துப் பார்க்க முடியாத நிலையில் உள்ளது பாஜக. எனவேதான் இந்த மத்திய பிரதேச ஃபார்முலாவை ராஜஸ்தானிலும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில்.. 
மத்திய பிரதேச மாநில புதிய முதல்வராக முன்னாள் அமைச்சரும், மூன்று முறை எம்எல்ஏவுமான மோகன் யாதவை (58) பாஜக திங்கள்கிழமை தேர்வு செய்தது. இவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராவார்.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முதல்வர் தேர்வில், நான்கு முறை முதல்வரான சிவராஜ் சிங் சௌஹானுக்கு (64) பதிலாக பாஜக மேலிடம் மோகன் யாதவை தேர்வு செய்தது.

மத்திய பிரதேசத்தின் இதர பிற்படுத்தப்படட் வகுப்பைச் சேர்ந்த முதல்வர்களாக 2003-இல் இருந்து உமா பாரதி, பாபுலால் கௌர், சிவராஜ் சிங் சௌகானைத் தொடர்ந்து நான்காவது முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் மொத்த மக்கள்தொகையில் 48 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்டோர் உள்ளதாலும், மோகன் யாதவின் பெயரை சிவராஜ் சிங் சௌஹான் பரிந்துரைத்ததாலும் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜேந்தர் சுக்லா, ஜெகதீஷ் தேவ்டா ஆகியோர் துணை முதல்வர்களாகவும், தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேரவைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com