பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு தொலைக்காட்சியில் கொலை மிரட்டல் விடுத்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் கே ஸ்ரீனிவாச ராவ் மீதும் அவரைப் பேட்டி எடுத்த நெறியாளர் மற்றும் அந்த செய்தித் தொலைக்காட்சி நிர்வாகம் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொலைக்காட்சி பேட்டியில் ராம் கோபால் வர்மாவைக் கொல்பவருக்கு ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என ஸ்ரீனிவாச ராவ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் தலைமை இயக்குநர் ராஜேந்திர ரெட்டியிடம் இயக்குநர் ராம் கோபால் புகார் அளித்துள்ளார்.
தனது மிரட்டல்கள் மூலம் சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களை வன்முறைக்குத் தூண்டிவிடுவதாக இயக்குநர் குற்றம் சாட்டியுள்ளார். இயக்குநர் ராம் கோபால் வர்மா ஆந்திராவின் முதல்வர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பயணத்தை மையமாக வைத்து 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
'யு' சான்றிதழுடன் அந்தத் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மற்றும் பவன் கல்யாணின் ஆதரவாளர்களால் அவருக்குக் கொலை மிரட்டல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.