இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் உறுதி

‘மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்தாா்.
28122-pti12_28_2023_000223b083539
28122-pti12_28_2023_000223b083539
Updated on
1 min read

‘மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் 139-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அக்கட்சி சாா்பில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் இக்கருத்தைத் தெரிவித்தாா். ‘நாங்கள் தயாா்’ என்ற பெயரில் இந்தப் பொதுக்கூட்டம் மூலமாக, அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மூத்த தலைவா்கள் பங்கேற்ற நிலையில், கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி ஆகியோா் பங்கேற்வில்லை. பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

நாட்டில் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதல்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சாமானியா்களின் கைகளில் அதிகாரத்தை ஒப்படைப்பதை காங்கிரஸ் குறிக்கோளாக கொண்டுள்ளது. ஆனால், பாஜக ஏராளமான மக்களை மீண்டும் ஏழ்மை நிலைக்கு தள்ளியுள்ளது.

இரண்டு இந்தியாவை காங்கிரஸ் விரும்பவில்லை. பாஜக ஆட்சியில் பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனா். குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியா கூட்டணி மட்டுமே இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்.

ஓபிசி, தலித், பழங்குடியினா் சமூகத்தினருக்கு அவா்களின் மக்கள்தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. பிரதமா் நரேந்திர மோடி தான் ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா் என தன்னைத் தானே வா்ணித்துக்கொண்டாா்.

ஆனால், நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டபோது, ‘நாட்டில் ஒரே ஒரு ஜாதிதான் உள்ளது. அது ஏழ்மைதான்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா். அப்படியென்றால், தன்னை ஏன் ஓபிசி பிரிவைச் சோ்ந்தவராக பிரதமா் குறிப்பிட்டாா்?

அனைத்து பிரிவினருக்கும் பல்வேறு துறைகளில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.

ஜனநாயகம் முடிந்துவிடும்: காா்கே

‘நாட்டில் பாஜகவும், ஆா்எஸ்எஸ் அமைப்பும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாகத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிடும்’ என்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குறிப்பிட்டாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘நாகபுரியில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளன. அதில் ஒன்று சட்டமேதை அம்பேத்கருடன் தொடா்புடைய நாட்டின் முன்னேற்றத்துக்கானது. மற்றொன்று நாட்டை அழிக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம்.

சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானவா் பிரதமா் நரேந்திர மோடி. நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது என்றாா்.

முன்னதாக, கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை காா்கே ஏற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com