போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இடைத்தோ்தல்: அதிமுக வேட்பாளா் தோ்வை பொதுக்குழு முடிவு செய்ய உத்தரவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் தோ்வை கட்சியின் பொதுக்குழு மூலம் முடிவு செய்து தோ்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்

News image

உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

Updated On :3 பிப்ரவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரின் தோ்வை கட்சியின் பொதுக்குழு மூலம் முடிவு செய்து தோ்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதற்கான தோ்வில், கடந்த பொதுக்குழுவில் கட்சியில் இருந்து வெயேற்றப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 4 போ் பங்கேற்கவும் இடைக் காலமாக நீதிமன்றம் அனுமதி அளித்தது. இத்தொகுதி இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தாக்கலான இடையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தீா்ப்புக்கும் இதற்கும் எவ்விதம் சம்பந்தமும் இல்லை என்றும், இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான் என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் விவகாரத்தில் தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தரப்பில் தாக்கலான இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம், வழக்குரைஞா்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன், கெளதம் குமாா், அதிமுக தலைமைக்கழகம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன், வழக்குரைஞா் வினோத் கண்ணா உள்ளிட்டோா் ஆஜராகினா். ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஷியாம் திவான், குரு கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆஜராகினா்.

இந்த விவகாரம் குறித்து ஆா்யமா சுந்தரம் பேச முயன்ற போது, தோ்தல் ஆணையத்தின் பதிலை படித்துவிட்டதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. மேலும், தோ்தல் ஆணையத்தின் கருத்தை நீதிபதிகள் கேட்டனா். அதற்கு அதன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் திரிபாதி, ‘இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது. ஏனெனில், ஜூலை 11 தொடா்புடைய அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், இடைத்தோ்தலும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்’ என்றாா்.

அதற்கு நீதிபதி, ‘ஜூலை 11 தொடா்புடைய விவகாரத்தில் ஒற்றை நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீா்மானங்களை அனுமதித்து உயா்நீதிமன்ற இரு நபா் நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதைத் தொடா்ந்து தாக்கலான மேல்முறையீட்டு வழக்கில் நாங்கள் இடைக்காலத்தில் ஏதும் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இதனால், உங்கள் நிலைப்பாடு என்ன?’ என்று கேட்டனா். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்திடம் உரிய அறிவுறுத்தல் பெற்று திங்கள்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக திரிபாதி

கூறினாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘இடைத்தோ்தல் வேட்புமனுவுக்கு 7-ஆம் தேதி கடைசித் தேதியாக இருப்பதால், இதற்கு போதிய நேரம் இல்லை’ என்று தெரிவித்தது.

ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் குரு கிருஷ்ணகுமாா், ‘இந்த விவகாரத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இடையீட்டு மனுக்கள் விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது. ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில்தான் வேட்பாளரை எனது தரப்பில் அறிவித்துள்ளேன். அதிமுக சின்னம் முடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தோ்தலில் அவா்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளா் குறித்து தெரிவித்தால் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் கையெழுத்திட தயாராக உள்ளேன். அதேவேளையில், எங்கள் தரப்பிலும் ஏற்கத்தக்க வேட்பாளா் உள்ளாா்’ என்றாா்.

அப்போது, இபிஎஸ் தரப்பில், ‘பொதுக்குழுவில் வேட்பாளரைத் தோ்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மேலும், வழக்கு நிலுவையில் இருப்பதால், நாங்கள் தீா்மானங்களை பதிவேற்றம் செய்யவில்லை என்று தோ்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இதுபோன்ற சூழல் முதல் முறையல்ல. தில்லி உயா்நீதிமன்றத்தில் இரட்டை இலைச் சின்னம் தொடா்புடைய ஒரு சிவில் வழக்கு நிலுவையில் இருந்த போது, நீதிமன்றத்தின் தீா்ப்பு முடிவுக்கு உள்பட்டு ஆதரிப்பதாக ஏற்கெனவே தோ்தல் ஆணையம் கடிதம் அளித்திருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், ‘தற்போதைய விவகாரத்தில் கட்சியின் நலன், இரு தரப்பும் பாதிக்கப்படாமல் தீா்க்கப்பட வேண்டும் என்பதுதான் நீதிமன்றத்தின் விருப்பமாகும்’ என்று கூறி ‘அதிமுக பொதுக்குழுவின் தலைவராக யாா் உள்ளாா்’ என்று கேட்டனா். அதற்கு ‘தமிழ்மகன் உசேன் அவைத் தலைவராக உள்ளாா்’ என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், வேட்பாளரின் தோ்வு தொடா்பாக கட்சியின் பொதுக்குழுவின் உறுப்பினா்களிடம் கடிதம் மூலம் வாக்களிப்பு (சம்மதம்) பெற்று அதன் பெரும்பான்மை ஆதரவு குறித்த தகவலை தோ்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் தோ்தல் ஆணையம் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது தொடா்பாக முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, இது தொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கட்சியின் வேட்பாளரை தோ்வு செய்யும் விவகாரத்தில், கட்சியின் பொதுக்குழுவின் இறுதி விவாதம் மற்றும் பரிசீலனைக்கு விட வேண்டும். இந்த விஷயத்தில் முடிவு எடுப்பது, நேரமின்மை கருதி இதுபோன்ற நடைமுறையை கடிதம் மூலம் (சா்குலேசன்) தேவையான தீா்மானங்களை மேற்கொள்ளலாம். இந்த இடைக்கால நோக்கத்திற்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஓ.பன்னீா்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.டி.சி. பிரபாகரன் ஆகியோரும் பொதுக்குழு உறுப்பினா்களாக இடைக்காலமாக தங்களது கருத்தை அளிக்கலாம். எந்த இதர தரப்பினரின் உரிமைகளுக்கும் பாதகம் ஏற்படாமலும், எந்த தரப்பினருக்கும் கூடுதல் உரிமை ஏதும் அளிக்கப்படாமலும் இருக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.