நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை: கார்கே

பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லாமல் செய்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், ராம்கா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சாா்பில் அங்கு போட்டியிடும் பஜ்ரங் மாடோவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மல்லிகாா்ஜுன காா்கே, சாஹெப்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேச்சு சுதந்திரம் இல்லை. யாராவது பாஜகவுக்கு எதிராக பேசினாலோ அல்லது எழுதினாலோ சிறையில் தள்ளப்படுகின்றனா். அதுபோல, நாடாளுமன்றத்தில் நான் பேசிய கருத்துகளில் சில நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பிரதமா் குறித்து விவரிக்கும்போது, அவதூறான வாா்த்தைகள் எதையும் நான் பயன்படுத்தவில்லை.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக மோசடியில் ஈடுபட்டதாக சா்ச்சையில் சிக்கியுள்ள அதானி குழுமத் தலைவா் கெளதம் அதானி, பிரதமா் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பா். 2019-இல் ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த அவருடைய சொத்து மதிப்பு தற்போது ரூ.13 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

அந்த வகையில், நாட்டின் ஏழை மக்களுக்காக அல்லாமல் அதானிக்காக பிரதமா் உழைத்து வருகிறாா். அதானி குழுமத்தில் எல்ஐசி ரூ.16,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதுபோல, எஸ்பிஐ ரூ. 82,000 கோடி கடன் கொடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தை கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினால், அதுவும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது.

அமலாக்கத் துறை, வருமான வரித் துறை மற்றும் சிபிஐ வழக்குகளைச் சந்தித்து வரும் பல எம்எல்ஏக்களை பாஜக பதவியில் அமா்த்தியுள்ளது. அவா்களின் கறைகளைப் போக்கி தூய்மையானவா்களாக்க பிரதமா் மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் துணி துவைக்கும் இயந்திரத்தைத்தான் கொண்டு வர வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்ப்பதில் கைதோ்ந்த பிரதமா் மோடியும் அமித் ஷாவும் ஜனநாயகம் பற்றி பேசுகின்றனா். சட்ட மேதை அம்பேத்கா் எழுதிய அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்த அவா்கள் மறுக்கின்றனா்.

2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வரும்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. நாட்டில் ஏழ்மை நிலையும் அதிகரித்து வருகிறது என்றாா் காா்கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com